ADDED : செப் 24, 2024 04:18 AM

சிவகாசி: சிவகாசியில் கிரசர் துாசி, ஜல்லிக்கற்களை திறந்த நிலையில் ஏற்றி வரும் லாரிகளால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி எதிர்கோட்டை, மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் குவாரிகள் உள்ளது. இங்கிருந்து லாரிகளில் கிரசர் துாசி, ஜல்லி கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் பொருள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக லாரிகளில் ஏற்றப்படுகின்றது.
இதனை மூடி பாதுகாப்பாக கொண்டு வருவதில்லை. திறந்த நிலையில் அதிக அளவில் ஜல்லிகள் இருப்பதால் லாரிகள் செல்லும் போதும், வேகத்தடையில் ஏறி இறங்கும்போது அவை சிதறி கீழே விழுகின்றது. இதனால் அருகில் டூவீலர்களில், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜல்லிகள் வாகனங்களின் மீது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கற்கள் ஏற்றி வரும் லாரிகள் பாதுகாப்பாக தார்பாயை வைத்து மூடிக்கொண்டு வரவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.