/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரணியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
/
ஊரணியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
ADDED : டிச 28, 2024 05:38 AM

சாத்துார் :   சாத்துார் ஒ. மேட்டுப் பட்டி ஊரணியில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ஒ.மேட்டுப்பட்டி யின் நிலத்தடி நீர் ஆதாரமாக அங்குள்ள ஊரணி உள்ளது. சின்னத்தம்பிபுரம், ஒ.மேட்டுப்பட்டி கண்மாய் வழியாக பெருகி வரும் மழை நீர் ஒ. மேட்டுப்பட்டி ஊரணியை வந்து அடைகிறது.
இந்த ஊரணியில் 3 உறை கிணறுகள் உள்ளன. நல்ல தண்ணீர் நிறைந்திருக்கும் இந்த ஊரணியில் தற்போது கிராமத்தின் தெற்கு பகுதியில் வசிப்பவர்களும் நடுத்தெரு, மேலத்தெரு பகுதியில் வசிக்கும் மக்களும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
மேலும் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களும் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொண்டு வந்து ஊரணியில் கொட்டி விடுகின்றனர்.
ஊரணிகள் கொட்டப்படும் குப்பையில் இறைச்சிக் கழிவுகளும் ரசாயன கழிவுகளும் இருப்பதால் தற்போது ஊரணி தண்ணீர் முழுவதும் மாசு அடைந்த நிலையில் உள்ளது.
ஊராட்சி பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பலரும் நீச்சல் பழக ஊரணியை பயன்படுத்தி வந்தனர்.
ஊரணி தண்ணீரில் குளித்தால் உடலில் அரிப்பு தடிப்பு ஏற்படுவதால் ஊரணியில் குளிப்பதையும் மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
மேலும் ஊரணியிலுள்ள 3குடிநீர் கிணறுகளும் மாசடைந்து போனதால் இந்த தண்ணீரையும் மக்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
குப்பை கழிவுகளால் ஊரணி தண்ணீர் துர்நாற்றம் வீசும் நிலையில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஊரணியில் குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்றவும்  மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

