/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உரிமம் பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடும்
/
உரிமம் பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடும்
ADDED : பிப் 21, 2025 07:05 AM
மாவட்டத்தில் தொழில் நகரான சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்துார், உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்த தொழில் நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால் தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை தொழில் உரிமம் பெறாமலேயே நடத்தப்படுகின்றது.
இவ்வாறு தொழில் உரிமம் பெறாமல் தொழிற்சாலை இயங்குவது சட்டப்படி குற்றம். முறையாக உள்ளாட்சி நிர்வாகங்களில் அனுமதி பெற்று நடக்காததால் உள்ளாட்சிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இதனால் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது.
உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொழிற்சாலைகளுக்கு சென்று கேட்டால் இதோ அதோ என போக்கு காட்டி வருகின்றனர். சில நேரங்களில் அதிகாரிகளை சரிகட்டி தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதுபோன்று உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் நிறுவனங்களில் எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தொழில் நடத்துபவர்களுக்கு, தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கும் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை.
இது தொழில்களை நடத்துபவர்களுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தொழில் உரிமம் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டாலும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது. எனவே உள்ளாட்சி நிர்வாகத்தினர் உரிமம் பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து உள்ளாட்சிக்கு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.