/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
/
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் கனமழை; அணைகளின் நீர்மட்டம் உயர்வு
ADDED : நவ 21, 2024 04:13 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பல வாரங்களுக்கு பிறகு நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல் பரவலான மழை பெய்தது. காலை 7:00 மணிக்கு பிறகும் மழை தொடர்ந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்து கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்தார். இந்நிலையில் குறைவான பள்ளிகள் மட்டுமே விடுப்பை அறிவித்தன. பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டன.
காலை 9:00 மணி முதல் விட்டு விட்டு மழையும், அதன் பிறகு மதியம் 1:00 மணி முதல் 2:00 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. மாலை நேரமும் மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்தது. சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்துார் பகுதிகளிலும் பரவலான மழை கொட்டி தீர்த்தது. பஸ் ஸ்டாண்டுகள் பொது வெளிகளில் மக்கள் நனைந்த படி பணிக்கு சென்றனர்.
அணைகளின் நீர்மட்டம்
பிளவக்கல் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 47.56 அடிக்கு தற்போது 34.94 அடி உள்ளது. கோவிலாறு 42.65 அடிக்கு 31.49 அடி உள்ளது. சாஸ்தாகோவில் நீர்தேக்கத்தில் 32.81 அடிக்கு 30.18 அடி உள்ளது. கோல்வார்பட்டி அணையில் 18 அடிக்கு 6.95 அடியும், ஆனைக்குட்டம் அணையில் 24.60 அடிக்கு 1.96 அடியும், குல்லுார்சந்தை அணையில் 8.03 அடிக்கு 5.28 அடியும், இருக்கன்குடி அணையில் 22 அடிக்கு 11.38 அடியும், வெம்பக்கோட்டை 23 அடிக்கு 11.02 அடியும் நீர்மட்டம் உள்ளது.
மழை அளவு
நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ.,ல் திருச்சுழி 9.50, ராஜபாளையம் 2.00, காரியாபட்டி 3.20, ஸ்ரீவில்லிபுத்துார் 3.00, விருதுநகர் 4.50, சாத்துார் 8.00, பிளவக்கல் பெரியாறு 4.80, வத்திராயிருப்பு 5.20, சிவகாசி 10, வெம்பக்கோட்டை 6.20, அருப்புக்கோட்டை 10 என அதிக பட்ச மழை கோவிலான்குளத்தில் 13 மி.மீ.,க்கு பதிவானது.

