/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு
/
சிவகாசி ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு
சிவகாசி ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு
சிவகாசி ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு
ADDED : செப் 22, 2024 03:45 AM

சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை, திருத்தங்கல் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது. எனவே சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன. சிவகாசிக்கு மூலப்பொருட்களை கொண்டு வருவதற்காகவும், உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும் தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இவைகளை தனியாக நிறுத்துவதற்கு என லாரி முனையம் இல்லை.
இதனால் நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் திருத்தங்கல் ரோடு, சிறுகுளம் கண்மாய் கரை ரோட்டில் ஒரு கி.மீ., துாரத்திற்கு அடுத்தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது. மேலும் விருதுநகர் பழைய ரோடு, கட்டளை பட்டி ரோடு, சாத்துார் ரோடு, காமராஜர் சிலை, வேலாயுத ரஸ்தா ரோடு பைபாஸ் ரோடு என நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நிறைந்த ரோட்டில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது.
பழனியாண்டவர்புரம் காலனி, ரத்ன விலாஸ் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் லாரிகளை நிறுத்தி விடுகின்றனர். ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பள்ளி, கல்லுாரி, நகர் பஸ்கள் இதனைக் கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றன.
மேலும் டூ வீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. பட்டாசுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் நகருக்குள் நிறுத்தப்படுவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும். இதனை தவிர்ப்பதற்கு சிவகாசியில் லாரி முனையம் அமைக்க வேண்டும்.
இந்த பிரச்னைக்காக விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மீன் மார்க்கெட் தற்காலிகமாக கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு என தயார் செய்யப்பட்டது. ஆனால் அங்கு எந்த வாகனமும் நிறுத்தாமல் வழக்கம் போல ரோடுகளிலேயே நிறுத்தப்படுகின்றது. இதனையாவது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குமரேசன், தொழிலதிபர்: சிவகாசிக்கு வருகின்ற கனரக வாகனங்கள், நிறுத்தப்படுவதற்கு லாரி முனையம் இல்லாததால் வேறு வழியின்றி போக்குவரத்து நிறைந்த ரோட்டில் நிறுத்தப்படுகின்றது.
தனியாக வேறு எங்கு நிறுத்தினாலும் லாரியில் உள்ள சரக்குகளுக்கு பாதுகாப்புக்கான நிலை இல்லை. நகருக்கு வந்த அன்றே கிளம்பும் லாரிகள் தான் இவ்வாறு நிறுத்தப்படுகின்றது. ஒன்று அல்லது இரு நாட்களுக்கு மேற்பட்டு நிறுத்தப்படும் லாரிகள் தனியார் லாரி செட்டிற்கு சென்று விடுகிறது.
தற்போது பெரும்பான்மையான கனரக வாகனங்கள் சாத்தூர் ரோடு பகுதியில் போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்தப்படுகிறது. இதே பகுதியில் லாரி முனையும் அமைக்கும் பட்சத்தில் இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு சிரமம் என்று நகருக்குள் வந்து செல்ல முடியும். எனவே மாநகராட்சி சார்பில் பாதுகாப்பான லாரி முனையம் அமைக்க வேண்டும்.