/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் வாறுகால் பணி
/
சாத்துாரில் ஆமை வேகத்தில் நடைபெறும் வாறுகால் பணி
ADDED : அக் 03, 2024 04:17 AM

சாத்துார்: சாத்துார் நகராட்சியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் வாறுகால் பணியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாத்துார் மெயின் ரோடு, திருவேங்கடம் ரோடு பகுதியில் கடந்த8 மாதங்களுக்கு முன்பு வாறுகால் கட்டும் பணி துவங்கப்பட்டது.
வாறுகால் மீது ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை அகற்றுவது, மினி வேன் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிவிட்டு பணிகளை துவங்க சில மாதங்கள் ஆனது.
இதன் காரணமாக மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆங்காங்கே சிறிய இடங்களில் முழு அளவில் பணிகள் முடிக்கப்படாமல் கம்பிகள் மட்டுமே பதித்தநிலையில் சிமெண்டு கலவை போடப்படாமல் உள்ளது.
சமீபத்தில் சாத்துாரில் பெய்த பலத்த மழை காரணமாக முழுமை அடையாத வாறுகாலில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி மக்களை இரவிலும் பகலிலும் கடித்து வருவதால் மர்மகாய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி பலர் தவிக்கும் நிலை உள்ளது.
பழைய படந்தால் ரோடு சந்திப்பு, தாசில்தார் அலுவலகம், கே.சி.ஏ.டி. குடிநீர் மேல் நிலைத்தொட்டி , குலாளர் தெரு சந்திப்பு பகுதியில் வாறுகால் முழுமையாக கட்டப்படாமல் உள்ளன.
போதுமான தடுப்பு கம்பி வேலி இல்லாத நிலையில் பணி நடைபெறும் இடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் கட்டுமான பணியை விரைவுபடுத்தி வாறுகால் பணி முழுமையக முடிக்க மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.