/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி அதிகரிப்பு; இளைஞர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
/
அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி அதிகரிப்பு; இளைஞர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி அதிகரிப்பு; இளைஞர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் மோசடி அதிகரிப்பு; இளைஞர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு தேவை
ADDED : ஜன 08, 2024 05:34 AM
நரிக்குடி : அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து இளைஞர்கள் ஏமாந்து வரும் வழக்குகள் மாவட்ட குற்ற பிரிவில் அதிகரித்து வருகின்றன. நடையாய் நடந்து பணம் கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி நியமனம் நடக்கும் என்பதை இளைஞர்களிடம் தெளிவுபடுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான படித்த இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். படித்த படிப்பு மறந்துவிடக்கூடாது என்பதற்காக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். என்ன தான் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தாலும், அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, எல்லா இளைஞர்கள் மத்தியிலும் ஏகபோகமாக உள்ளது. இதனை அறிந்து இடைத்தரகர்கள் குறுக்கு வழியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
அரசியல்வாதிகள், அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் அரசு பணி வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றனர். இதனை நம்பி பலர் வட்டிக்கு வாங்கி முன் பணம் கொடுக்கின்றனர். இதில் பெரும்பாலான இடைத்தரகர்கள் அரசியல்வாதிகள், அரசு உயர் பதவியில் உள்ளவர்களின் உதவியாளர்களிடம் பணத்தை கொடுக்கின்றனர். சில இடைத்தரகர்கள் கொடுக்காமலேயே கொடுத்ததாக நம்ப வைக்கின்றனர். நாட்கள் செல்ல செல்ல வேலைக்கான உத்தரவை கேட்டு நச்சரிக்கும் இளைஞர்களிடம் நம்பிக்கையை தளர விடாதீர்கள் நிச்சயம் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர். அது மட்டுமல்ல சிலர் போலி உத்தரவுகளை கொடுக்கின்றனர். இதனை நம்பி பணியில் சேர முற்படும் போதுதான் அது போலி என தெரிய வருகிறது.
அதற்குப் பின் பணம் கொடுத்தவர்கள் ஏமாந்து விட்டோம் என்கிற விஷயம் தெரிய வருகிறது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமல் கடன் மேல் கடன் பட்டு விரக்தி அடைகின்றனர். வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கொடுத்த பணத்தை இடைத்தரகர்களிடம் இருந்து எப்படியாவது பெற வேண்டும் என நடையாய் நடக்கின்றனர். இடைத்தரகர்கள் பணத்தை கொடுக்க முடியாமல் அலைக்கழிப்பதுடன், மிரட்டல்கள் விடுகின்றனர். அதற்குப் பின் வேறு வழியின்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கின்றனர். இதுபோன்று தற்போது ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கு கடிவாளம் போட குற்றப்பிரிவு போலீசார் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே வேலை பெற முடியும் என்பதை தெளிவுபடுத்த முன் வர வேண்டும்.