ADDED : செப் 23, 2024 05:25 AM
ராஜபாளையம் : 'ராஜபாளையம் நகராட்சி ஒட்டியுள்ள ஆழ்துளை கிணறுகளில் பெறப்படும் தண்ணீரில் உவர்ப்பு, வேதித்தன்மை அதிகரித்து வருவதால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் சேத்துார் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகின்றன.
பெரும்பாலும் கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தென்னை, வாழை காய்கறி பயிர்களும் நீர் குறைந்த பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஆழ்துளை கிணற்று நீர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
முன்பு கண்மாய் பாசன நீர் மூலம் பெறும் விவசாயம் நல்ல மகசூலை பெற்று வந்த நிலையில் நீரின் தன்மை உவர்ப்பாக மாறியதுடன் ஆழ்துளை கிணற்று நீரின் வேதித்தன்மை அதிகரித்துள்ளதால் சாகுபடி குறைவும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயி தர்மலிங்க ராஜா: மழை நீரை முறையாக நீர் நிலைகள் சேமிக்க வழியில்லாததுடன் கழிவுகளை கொட்டும் இடமாக கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை மாற்றி விட்டனர்.
இதற்கு நகரின் சாக்கடை கழிவு நீர் தேங்கும் பகுதியாக கண்மாயை மாற்றியதே ஆகும். பல்வேறு பகுதிகளும் இதே நிலை காணப்படுவதால் நீர்நிலைகளை ஒட்டிய விவசாயமும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு பகுதியின் நீரின் தன்மை மண்ணின் தன்மையை ஆய்வு செய்து பிரச்னைகளை போக்க அரசு துறைகள் முன் வர வேண்டும்.