/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருவநிலை மாற்றத்தால் தென்னை மரங்கள் பாதிப்புகள் அதிகரிப்பு
/
பருவநிலை மாற்றத்தால் தென்னை மரங்கள் பாதிப்புகள் அதிகரிப்பு
பருவநிலை மாற்றத்தால் தென்னை மரங்கள் பாதிப்புகள் அதிகரிப்பு
பருவநிலை மாற்றத்தால் தென்னை மரங்கள் பாதிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஏப் 24, 2025 06:38 AM

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளில் 10 ஆயிரத்து 660 எக்டேருக்கு தென்னை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலால் 1180 எக்டேர் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் தற்போது மார்ச், ஏப்ரல் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வழக்கமாக பங்குனி, சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் இருக்குமே தவிர மழை இருக்காது.
தற்போது பலத்த காற்றுடன் மாலை நேரங்களில் மழை பெய்வதால் மா சாகுபடி பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அதே போன்று தான் தென்னை சாகுபடியும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
வெள்ளை ஈ தாக்கத்திற்கு பிறகு தென்னைகளுக்கு உயிரூட்டம் அளிக்க தென்னை டானிக் வழங்க வேண்டும் என 2025 ஜன.ல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது பருவ நிலை மாற்றத்தால் தென்னையில் ஆங்காங்கே சிலந்தி நோய் தாக்கம் காணப்படுகிறது. தென்னையில் சிலந்தி நோய் என்பது செம்பான் சிலந்தி தாக்குதலால் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்னையாகும். இது குரும்பைகளின் மென்மையான திசுக்களில் சாற்றை உறிஞ்சியதால், பழுப்பு நிறத் திட்டுகள் தோன்றி, குரும்பைகள் சிறுத்து உதிர்ந்துவிடும்.
இதேபோன்று 2003ல் கலெக்டர் கோபால் இருந்த நேரத்தில், சிலந்தி நோய் பாதிப்பு ஏற்பட்ட போது சி.பி.சி.ஆர்.ஐ., எனும் கேரளா காசர்கோடுவில் உள்ள மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விஞ்ஞானிகளை அழைத்து வந்து கட்டுப்படுத்தினர்.
தற்போது பருவநிலை மாற்றம் இந்த பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏற்ற தாழ்வான ஈரப்பதம் காரணமாக சிலந்தி நோய் பாதிப்பு தென்னைகளில் அதிகம் ஏற்படுகிறது. தற்போது இந்த நோய் பாதிப்பு குறித்த கோரிக்கைக்கு தோட்டக்கலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும், தமிழக வேளாண் பல்கலைவிஞ்ஞானிகளை கள ஆய்வுக்கு அழைத்து வருவர். ஆனால் இது பருவநிலை மாற்ற பாதிப்பு. வரும் நாட்களில் வேறு பாதிப்புகளும் தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்படலாம்.
மத்திய தோட்ட பயிர்கள்ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து விஞ்ஞானிகளை வரவழைக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் தற்போது தென்னையில் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தி அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.

