/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்.. பரவுது காய்ச்சல்! மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, மழையால்
/
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்.. பரவுது காய்ச்சல்! மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, மழையால்
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்.. பரவுது காய்ச்சல்! மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, மழையால்
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்.. பரவுது காய்ச்சல்! மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை, மழையால்
ADDED : அக் 08, 2025 01:16 AM

மாவட்டத்தில் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய நகர்பகுதிகள், அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காலையில் வெயில், மாலையில் தீவிரமாகவும், மிதமாகவும், பரவலாகவும் மழை பெய்து வருகிறது.
இதனால் வீடுகளின் கூரையில் தொட்டிகள், டயர்கள், சிரட்டை, தகரங்கள், சேதமான பிளாஸ்டிக் குடங்கள், டிரம்களில் மழை நீர் தேங்குகிறது. இவற்றை வீடுகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்தி மழை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளின் மேல்நிலைக்குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருவதால் வீடுகளில் தண்ணீரை குடங்கள், டிரம்களில் ஒரு வாரம் வரை சேமித்து வைக்கின்றனர்.
ஆனால் தண்ணீர் தேங்கும், சேமித்து வைக்கும் பொருட்கள், இடங்களை முறையாக சுத்தம் செய்யாமல் நீண்ட நாட்கள் வைப்பதால் ஏ.டி.எஸ்., கொசுக்கள் முட்டையிட்டு டெங்கு வைரசுடன் உருவாகி காய்ச்சலை பரப்புகின்றன.
தற்போது பெய்யும் மாலை மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வற்றாமல் இருப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. இவை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதற்காக அரசு மருத்துவமனைகளில் சென்று வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு நான்கு, ஐந்து நாட்களை கடந்தும் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் இருந்தால், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு எந்த வகையான காய்ச்சல் பாதிப்பு என கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் விருதுநகர் சின்னப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பிறந்து ஒரு மாதமான ஆண் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது.
குழந்தைகள் நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று அக். 2ல் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை முடிந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் உள்ளது.
இது போன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருகிறது. ஒரு இடத்தில் டெங்கு என தெரிந்த பின் அப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பருவ மழைக்காலம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது:
சின்னப்பள்ளிவாசல் தெருவில் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் அனைத்து பகுதிகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என்றார்.