ADDED : ஜன 25, 2024 04:47 AM
விருதுநகர்; விருதுநகரில் மும்முனை இணைப்பு பெறபட்ட வணிக வளாகங்கள், உணவகங்களில் மின் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு உயர்ந்துள்ளது. மின்வாரியத்தினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், அல்லம்பட்டி விலக்கு, பாண்டியன் நகர் மெயின் ரோடு, மதுரை, அருப்புக்கோட்டை, சாத்துார் ரோடு பகுதிகள், விருதுநகர் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள், உணவகங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றாற் போல மும்முனை இணைப்பு பெற்று மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட சாதனங்களை உபயோகிக்கின்றனர். ஆனால் சில உணவகங்கள் மும்முனை இணைப்பில் இருந்து ஒரு முனையை மீட்டருக்கு மின்சாரம் வரும் மின்ஒயர்களில் நேரடியாக பொருத்தி பயன்படுத்துகின்றனர். இதை வெளியே தெரியாதவாறு அமைத்திருப்பதால் மின் அளவீடு செய்யவரும் ஊழியர்களும் கவனிப்பதில்லை.
சாதாரணமாக மும்முனை மின்சாரம் பெற்ற கடைகளில் மின்சாரம் உபயோகம் எவ்வளவு இருக்கும் என மின்சாரத்துறை ஊழியர்களுக்கு தெரிந்திருந்தும், அளவீடு குறைவாக காட்டுவதை மின் அளவீடு செய்யும் ஊழியர்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல், இருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுகள் செய்து மின்திருட்டில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.