/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனவிலங்குகள் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் அலட்சியம்: சாகுபடி நிலங்கள் பாழாவதால் விவசாயிகள் அதிருப்தி
/
வனவிலங்குகள் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் அலட்சியம்: சாகுபடி நிலங்கள் பாழாவதால் விவசாயிகள் அதிருப்தி
வனவிலங்குகள் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் அலட்சியம்: சாகுபடி நிலங்கள் பாழாவதால் விவசாயிகள் அதிருப்தி
வனவிலங்குகள் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் அலட்சியம்: சாகுபடி நிலங்கள் பாழாவதால் விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 21, 2024 05:02 AM
ராஜபாளையம்: வனத்தை ஒட்டியுள்ள சாகுபடி பரப்புகளில் வனவிலங்குகள் நடமாட்ட பிரச்சனையை கட்டுப்படுத்துவதில் வனத்துறையினரின் செயல்பாடு திருப்தி இல்லாததால் மலையை ஒட்டிய பகுதி விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் யானைகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றி, மான், காட்டு மாடு, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பல்வேறு பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் உள்ளன.
இவற்றை ஒட்டிய விளை நிலங்களில் ஏராளமான பரப்பளவிற்கு மா, தென்னை, வாழை, கொய்யா, எலுமிச்சை, பலா உள்ளிட்ட சாகுபடி பெருமளவு நடக்கிறது.
இப்பகுதி விளை நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றி, மான், மயில் போன்றவைகளால் பயிர்களை சேதப்படுத்தும் நிலை தொடர்கிறது.
தற்போதைய நிலையில் ராஜபாளையம், சேத்துார், தேவதானம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் அடிக்கடி யானைகளால் வாழை, தென்னை, மா, பலா உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இது குறித்து உடனடி தகவல் தெரிவித்தாலும் பாதிப்பு இடங்கள் அதிகமாக உள்ளதால் சில பகுதிகளில் மட்டும் வனத்துறையினர் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு விவசாயக் குறைதீர் கூட்டத்திலும் காட்டுப் பன்றிகள், யானைகளால் தொடரும் சேதங்களை கட்டுப்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகளின் கோரிக்கைகளும் தொடர்கின்றன.
இந்நிலையில் ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் செல்லும் பாதையில் தென்னந்தோப்பில் வனவிலங்கு வேட்டைக்கு வைக்கப்பட்ட சட்ட விரோத மின் கம்பியில் சிக்கி யானை இறந்ததால் யானைகளை விரட்டும் கண்காணிப்பு பணியில் பழைய வேகம் இல்லை.
இதனால் தற்போது வரை கல்லாத்து காடு, எஸ்.வளைவு, ராக்காச்சி அம்மன் கோயில் பாதை உள்ளிட்ட பலபகுதி யானைகளால் ஏற்படும் சேதநிலை தினசரி தொடர்ந்தபடி உள்ளது.
யானைகளின் வழித்தட பகுதியை கண்காணித்து வனப்பகுதிகளுக்குள் விரட்டும் திட்டமிடலை வனத்துறையினரும் முறையாக செய்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். யானை இறப்பு சம்பவத்திற்கு பின் பட்டாசு வெடிப்பது போன்ற நடவடிக்கைகளையும் விவசாயிகள் அதிகம் மேற்கொள்வதில்லை.
நிரந்தர தீர்வு காணும் விதமாக விலங்குகளுக்கான தண்ணீர் உணவு தேவைகள் போன்ற கட்டமைப்புகளை வனப் பகுதிக்குள் உருவாக்குவதுடன், விவசாயம் என்ற பெயரில் யானைகள் வழித்தடங்களில் முளைத்து வரும் புதிய மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வணிக, சொகுசு கட்டுமானங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும். பெயரளவிற்கு நோட்டீஸ் மட்டும் வழங்கும் நடவடிக்கைகளால் விவசாயிகளிடையே வனத்துறை மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது.