/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி அணையில் முள்செடிகளால் பாதிப்பு
/
இருக்கன்குடி அணையில் முள்செடிகளால் பாதிப்பு
ADDED : மார் 30, 2025 03:20 AM
சாத்துார் : இருக்கன்குடி அணையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வைப்பாறு, அர்ச்சுனா நதிகளுக்கு இடையில் இருக்கன்குடி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் விருதுநகர் மாவட்டம், துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. சாத்துார் தாலுகாவிற்குட்பட்ட வெங்கடாசலபுரம், படந்தால் ஊராட்சிகளுக்கும் சாத்துார் நகராட்சிக்கும் குடிநீர் உறை கிணறுகள் அணைப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதி, கரையோர பகுதிகளிலும் காடு போல முள் செடி முளைத்துள்ளது. இந்த முள் செடி அணையில் உள்ள குறைந்த அளவு நீரை வேகமாக உறிஞ்சி வற்ற வைத்து வருகின்றன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அணையில் உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.
இதன் காரணமாக தண்ணீர் தேங்கி இருந்த போது வேர் அழுகி வாடி இருந்த முள் செடிகள் எல்லாம் தற்போது மீண்டும் முளைவிட்டு வளர துவங்கி உள்ளன. மேலும் ஏற்கனவே காய்ந்து போன முள் செடிகள் மக்கி மண்ணான நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதி மேடாக மாறி உள்ளது.
இதனால் அணையின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்படும் நிலை உள்ளது. எனவே அணையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.