/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடையூராக .உள்ள கருவேல மரங்களை அகற்றுவது அவசியம்
/
இடையூராக .உள்ள கருவேல மரங்களை அகற்றுவது அவசியம்
ADDED : அக் 27, 2024 06:20 AM

மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ரோட்டில் இருபுறமும், நூறு வயது உடைய வேம்பு, ஆலமரம், அரசமரம் உட்பட பல வகை மரங்கள் உயர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதேபோல் அகலம் குறைந்த கிராமப்புற சாலைகளிலும் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ரோட்டிலும் சில மரங்கள் காய்ந்து உயிர்ப்பு தன்மை இழந்து ஒரு பக்கம் சாய்ந்து எந்நேரம் முறிந்து விழுமோ என்ற நிலையில் காணப்படுகிறது. அந்த ரோட்டின் வழியாக செல்லும் மின் வயர்களின் பாதுகாப்பு கருதி மரங்களின் கிளைகளை ஒரு பக்கம் மின்வாரியத் துறையினர் அவ்வப்போது வெட்டி விடுகின்றனர். இதனால் ஒரு பக்கம் அழுத்தம் தாங்காமல் மரம் ரோட்டிலோ அல்லது மறுபுறம் உள்ள கட்டடங்களிலோ சாய்ந்து முறிந்து விழும் சூழல் காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மண்ணின் இறுக்கம் குறைந்து மரங்கள் ஒரு பக்கம் சாய்வதை பல்வேறு வழித்தடங்களில் காண முடிகிறது. இதனால் அந்த வழியாக டூ வீலர், கார், வேன், பஸ்களில் செல்லும் பயணிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் காணப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மீனாட்சிபுரம் விலக்கிலிருந்து கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் ஒரு மரம் சாய்ந்து அருகிலுள்ள கட்டத்தில் விழுந்து காணப்படுகிறது.
இதேபோல் பல்வேறு கிராமப்புற வழித்தடங்களில் ரோட்டின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து விரிந்து வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் கூட பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதிலும் ரோட்டோர வளைவு பகுதிகளில் கருவேல மரங்கள் நீண்டு வளர்ந்து இருப்பதால் டூவீலர்களில் வருபவர்கள் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிவகாசி மெயின் ரோட்டுக்கு செல்லும் ரோட்டில் கருவேல முள் செடிகள் வளர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் தேசிய, மாநில, கிராமப்புற சாலைகளில் மண்ணின் இறுக்கம் குறைந்து பல மரங்கள் சாய்ந்து காணப்படுகிறது. அதன் வழியாக கனரக வாகனங்கள் சென்றால் அழுத்தம் தாங்காமல் மரங்கள் முறிந்து விடும் சூழல் உள்ளது.
எனவே, மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு வழித்தடத்தில் சாய்ந்து காணப்படும் மரங்களை அப்புறப்படுத்தவும், நீண்டு வளர்ந்து காணப்படும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.