/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஜல் ஜீவன் குழாய் பதிப்பில்அரை குறை பணியால் அவதி
/
ஜல் ஜீவன் குழாய் பதிப்பில்அரை குறை பணியால் அவதி
ADDED : அக் 02, 2025 03:25 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைத்த ஜல் ஜீவன் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியை அறைகுறையாக விட்டு சென்றதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ரோசல்பட்டி ஊராட்சி நகராட்சி பகுதிக்கு அருகே இருப்பதாலும் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷனிற்கு எளிதாக சென்று வர முடியும் என்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகம் இருக்கும் போது துவங்கப்பட்டது. இதற்காக தனியாக பங்கீட்டு தொகை மக்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டப்படி எல்லா வீடுகளுக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பணிகளை முடித்து கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் அனைத்தும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது ரோசல்பட்டி ஊராட்சியில் வீடுகளுக்கு ஜல் ஜீவனில் குடிநீர் இணைப்பு முழுவதும் கொடுக்கப்படாமல் வெறும் குழாய்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வருவதற்கான வால்வு எதுவும் அமைக்கப்படவில்லை.
பணிகள் மெத்தனமாக செய்யப்பட்டதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே ரோசல்பட்டி ஊராட்சியில் ஜல் ஜீவன் பணிகளை முறையாக முடித்து மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.