/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பனி பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு
/
பனி பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு
ADDED : பிப் 05, 2025 04:51 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் பனி பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பாலையம்பட்டி, குறிஞ்சாக்குளம், பொய்யாங்குளம், செம்பட்டி, இலங்கிபட்டி, புலியூரான், மேட்டு தொட்டியாங்குளம், தமிழ் பாடி உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை பூ விவசாயம்நடந்து வருகிறது. இங்கு விளையும் மல்லிகை பூக்கள் உள்ளூர் பூ மார்க்கெட், மதுரை, நாகர்கோவில் ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. மழைக்காலம் 3 மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்களில் பூக்கள் கிடைக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பூக்கள் விளைய துவங்கும். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ விவசாயம் நடந்து வரும் நிலையில், அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் டன் கணக்கில் மல்லிகை பூ குவியும்.
ஆனால், தற்போது பருவ கால மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி மழை பெய்கிறது. அதிக பனி, குளிர்ச்சியாகவும் இருப்பதால் செடிகள் விரைத்து மல்லிகை பூ விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூமியும் நன்கு ஈரப்பதமாக இருப்பதால் செடிகள் பச்சை பசேலன இருக்கும். ஆனால், மல்லிகை மொட்டுகள் இருக்காது.
இதுகுறித்து மல்லிகை பூ விவசாயிகள்: தை மாதம் பொங்கலுக்கு பிறகு மல்லிகை பூ விளைச்சல் நன்கு இருக்கும். ஆனால் காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழையால் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.
நல்ல விலை இருந்தாலும், பூ விளைச்சல் இல்லை. இன்றைய சூழலில் ஒரு விவசாயிக்கு தன் தோட்டத்திலிருந்து 1 கிலோ மல்லிகை கிடைப்பது அரிதாக உள்ளது. 3 நாட்களுக்கு முன்பு முகூர்த்த நாட்களாக இருந்ததால் கிலோ 6 ஆயிரம் வரை மல்லிகை பூ விற்றது. மார்ச் மாதத்திற்கு பிறகு தான் பூ விலை குறையும்.