/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
/
சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ADDED : ஏப் 13, 2025 05:20 AM

காரியாபட்டி : சேதமான பயணிகள் நிழற்குடை இருக்கைகள், தேங்கிய குப்பை, ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
காரியாபட்டி கே. கரிசல்குளத்தில் வாறுகாலில் குப்பை தேங்கி கிடக்கின்றன. இதனை சுத்தப்படுத்தாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதுடன் கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. குப்பை வாங்க வருவது இல்லை. ஆங்காங்கே தேங்கி கிடப்பதால் நாய், பன்றிகள் கிளறி அசுத்தமாக கிடக்கிறது.மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில், முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை நடமாடும் காய்கறி கடைகள், தெருவோர கடைகள் வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்டில் அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு மழை, வெயிலுக்கு காத்திருந்து செல்ல ரூ. 20 லட்சம் செலவில் நிழற்குடை கட்டப்பட்டது. ஒரு சில நாட்கள் மட்டுமே பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதற்குப்பின் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டதால் பயணியர் நிழற்குடை பயன்பாடு இன்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
அங்கிருந்த இருக்கைகள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. அதனைச் சுற்றி தெருவோரக்கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியவில்லை. மழை, வெயிலுக்கு திறந்தவெளியில் காத்திருக்கின்றனர். தேவையான நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
பராமரிக்க வேண்டும்
அழகர்சாமி, பொதுநல அமைப்பாளர்: பஸ் ஸ்டாண்டில் அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பயணிகளுக்கு பயன்படும் வகையில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி கிடப்பதை பராமரித்து, உடைந்துள்ள இருக்கைகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அக்கிரமிப்புகளால் அவஸ்தை
பாலமுருகன், தனியார் ஊழியர்: மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை இருபுறங்களிலும் நடமாடும் காய்கறி கடைகள், ரோட்டோர காய்கறி கடையில் வைத்து ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தகராறு ஏற்படுகிறது. தொடர்ந்து விபத்து நடப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துர்நாற்றம் வீசும் வாறுகால்
பழனிச்சாமி, தனியார் ஊழியர்: கே. கரிசல்குளத்தில் பல மாதங்களாக வாறுகால் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அக்கம் பக்கத்தில் குடியிருக்க முடியவில்லை. கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. குப்பை வாங்க பணியாளர்கள் வராததால் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. நாய், பன்றிகள் கிளறுவதால் அசுத்தமாக கிடக்கிறது. வாறுகாலை சுத்தம் செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

