ADDED : நவ 24, 2026 05:38 PM
.* கண்மாய்களில் மறுகால் ஓடையில் தடுப்பணைகள் கட்டுவதை . . .
* மழைநீர் வரத்து பாதையில் கட்டுவதால் பலனின்றி போக வாய்ப்பு . . .
அருப்புக்கோட்டை: மத்திய அரசின் விபி-ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ்,விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் உபரி தண்ணீர் செல்லும் பாதையில் தடுப்பணைகள் கட்டாமல் கண்மாய்களுக்கு நீர் வரும் பாதைகளில் கட்டி வருவதால் கண்மாய்களுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டு விடும். அதிகாரிகள் முறையே ஆய்வு செய்து உபரி நீர் செல்லும் பாதையில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் விபி-ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ்,விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தடுப்பணைகள் கட்ட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடிக்கு குறையாமல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பணை கட்ட ரூ. 4.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு , நிலத்தடி நீர் பற்றாக்குறையை சமாளிக்க நீர் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 200 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண்மாய்களின் தன்மைக்கு ஏற்ப எந்தெந்த இடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என திட்டமிடப்பட்டு, கிராம சபை ஒப்புதல் உடன் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை 100 நாள் வேலை வாய்ப்பு பயனாளிகளை கொண்டு செய்யப்படுகிறது. மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் நிதியை பகிர்ந்து கொள்கின்றன.
ஆனால் திட்டமிடப்பட்டு மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து பயன்படக்கூடிய தடுப்பணைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிகாரிகள் எந்த இடத்தில் கட்ட வேண்டும் என முறையாக ஆய்வு செய்யாமல் ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்கின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 22 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கண்மாய்களில் பெரும்பாலானவை வறண்டு கிடக்கிறது. ஒரு சில கண்மாய்களில் தண்ணீர் முழுமையான கொள்ளளவை எட்டவில்லை. இவற்றிற்கு வரும் மழைநீர் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பினாலும், சேதமடைந்தும் அடைப்பட்டு போய் உள்ளன. முதலில் மழைநீர் வரத்து ஓடைகளை சரி செய்து,கண்மாயில் தண்ணீர் சேகரிப்பதற்குரிய வழிகளை செய்ய வேண்டும். அதன் பின், கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் மறுகால் வரத்து ஓடையில் தான் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
இதுகுறித்து விவசாயிகள் : தடுப்பணைகள் கட்டுவது நல்ல விஷயம் தான். ஆனால் கண்மாய்களுக்கே தண்ணீர் வருவது இல்லை. மழைநீர் வரத்து ஓடைகளில் தடுப்பணைகள் கட்ட அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். மறுகால் வரத்து ஓடையில் தான் தடுப்பணைகள் கட்ட வேண்டும். அதை விட்டு மழைநீர் வரத்து ஓடைகளில் தடுப்பணைகளை கட்டி கண்மாய்க்குள் தண்ணீர் வராமல் செய்கின்ற வழியைத்தான் செய்கின்றனர். ஊராட்சிகளுக்கு கண்மாயில் தான் போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இதில், தடுப்பணைகள் கட்டினால், வருகின்ற தண்ணீரும் வராமல் போய்விடும். குடிநீர் பிரச்சனை ஏற்படும்.
மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் பல கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டும் பணி செய்வதை முழுமையாக ஆய்வு செய்து, கண்மாயின் மறுகால் வரத்து ஓடையில் தான் தடுப்பணைகள் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். முதற்கட்டமாக, மழைநீர் வரத்து ஓடைகளை சரி செய்து கண்மாய்களுக்குள் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதியை முறையாக பயனுள்ள வழியில் செலவழிக்க வேண்டும்.
