/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை--குருவாயூர் ரயிலில் வரும் கேரள பயணிகள்
/
மதுரை--குருவாயூர் ரயிலில் வரும் கேரள பயணிகள்
ADDED : ஜூலை 16, 2025 01:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார், : மதுரை-- குருவாயூர் இடையே இயங்கும் ரயிலில் அதிகளவில் வரும் கேரளா பயணிகளால் ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
மதுரையில் இருந்து தினமும் காலை 11:25 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக குருவாயூருக்கு ஒரு ரயில் இயங்குகிறது.
மறு மார்க்கத்தில் குருவாயூரிலிருந்து அதிகாலை 5:10 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து இரவு 7:00 மணிக்கு மதுரை வந்தடையும் வகையில் மற்றொரு ரயில் இயங்கி வருகிறது.
இந்த ரயில்கள் மூலம் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் கேரளாவில் பல்வேறு நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
இதேபோல் கேரளாவில் குருவாயூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், புனலூர், தென்மலை மக்களும் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள், மதுரையில் மீனாட்சியம்மனை தரிசிக்க வருகின்றனர். இதனால் இந்த ரயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கேரளா பயணிகள் ஆண்டாள் கோயிலுக்கு வரும் நிலையில் நகரில் பல்வேறு பால்கோவா கடைகளில் பால்கோவா விற்பனை அதிகரித்து வருகிறது. மேலும் ரயில்களில் 100 கிராம் முதல் கால் கிலோ வரை பாக்கெட்டுக்காக பால்கோவா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால்கோவாவை ஒரு முறை வாங்கி சாப்பிடும் மக்கள் அடுத்து இந்த ரயிலில் பயணிக்கும் போதெல்லாம் பால்கோவா வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் நகரில் பால்கோவா விற்பனை அதிகரித்து வருகிறது.