ADDED : ஏப் 30, 2025 06:41 AM

விருதுநகர்; விருதுநகர் அருகே கோல்வார்பட்டி அணையின் நீர்மட்டம் 14 அடியாக ஜன. மாதம் இருந்த நிலையில் தற்போது10.49 அடியாக குறைந்துள்ளது.
விருதுநகர் கவுசிகா நதி சேருமிடத்தில் குல்லுார்சந்தை அணை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் உபரிநீரும், அதே போல் ஆனைக்குட்டத்தில் இருந்து வெளியேறும் அர்ஜூனா நதி வாடியூர், கன்னிசேரி வழியாக கோல்வார்பட்டிக்கு வரும் நீரும் சேரும் இடத்தில் கோல்வார்பட்டி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 18.04 அடியாகும்.
இந்த அணையில் கருவேல மரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 22 அடி உயரம் இருந்த அணை நான்கடி குறைந்ததற்கு மேவி வரும் மண்ணும் ஒரு காரணம். மேலும் பெரிய பரப்பளவு கொண்ட கோல்வார்பட்டி அணை குறுகி உள்ளது. ஜன. மாதம் 14.14 அடி நீர்மட்டம் இருந்தது.
இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர் சிறுகுளம், நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. அவ்வப்போது மழையும், மார்ச் முதல் அனல் வெயிலும் வாட்டியதால் தற்போது நீரின் மட்டும் 10.49 அடியாக குறைந்துள்ளது.அணையை ஆழப்படுத்தினால் தேக்கும் திறன் அதிகமாகும்.
தற்போது கரைகளில் கருவேல மரங்களும் அடர்ந்து காணப்படுகின்றன. ஷட்டர்களை யொட்டி விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே அணையை பராமரிக்க வேண்டும். வரும் காலங்களில் ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

