ADDED : அக் 20, 2024 06:29 AM
விருதுநகர் : விருதுநகரில் தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
மாவட்ட நிர்வாகம், குருதி பரிமாற்று குழுமம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்தி கொடுத்த 3 கல்லுாரி, 3 தன்னார்வ அமைப்புகளுக்கு கேடயங்களையும், 164 ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றுகளையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.
அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்தி கொடுத்த மெப்கோ பொறியியல் கல்லூரி, கலசலிங்கம் பல்கலை, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி ஆகிய கல்லூரிகள், சிவகாசி நண்பர்கள் இரத்ததான குழு, விருதுநகர் ஐயப்பசாமி மண்டல பூஜை அன்னதான குழு, சிவகாசி அன்புத்தடம் அறக்கட்டளை ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, அரசு மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் அனிதா, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் சாந்தினி கில்டா உட்பட ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், ரத்த தான முகாம் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.