/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் பெயரில் கண்மாயில் மண் கொள்ளை
/
விவசாயிகள் பெயரில் கண்மாயில் மண் கொள்ளை
ADDED : செப் 04, 2025 11:57 PM

ராஜபாளையம்,:ராஜபாளையம் புளியங்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக விவசாயிகள் பெயரில் மண் அள்ளி விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுவது குறித்து விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் தாலுகா அலுவலகம் பின்புறம் புளியங்குளம் கண்மாய் உள்ளது. மேற்கே தொடர்ச்சி மலை அடிவார நீர் வரத்து, அய்யனார் கோயில் நீர் என இரண்டு பகுதியில் நீர் வரத்து பெற்று நகராட்சி அருகே 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன பகுதியுடன் உள்ள புளியங்குளம் கண்மாய் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவின் கீழ் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
நகராட்சி பகுதியை ஒட்டி உள்ளதால் இங்கு விளைநிலங்கள் வேகமாக பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கண்மாயின் நடுவே 12 அடி ஆழத்திற்கு செம்மண் அள்ளப்பட்டு விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் -பரப்பாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீர் பாசன சங்க தலைவர் தர்ம கிருஷ்ணராஜா: விதி மீறி நன்செய் நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதுடன் விவசாயிகள் பெயரில் சட்டவிரோதமாக அதிக அளவு ஆழத்திற்கு மண் தோண்டி கொள்ளை நடந்து வருகிறது.
கண்மாய் பாசன விவசாயிகள் ஒருவருக்கும் இதனால் நன்மை இல்லை. வருவாய்த் துறையினருடன் போலீசாரும் இணைந்து கைகோர்க்கும் நிலையில் விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்கு உள்ளாகிறது.