/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மருத்துவக்கல்லுாரிகளில் சலவை பணிகள் பாதிப்பு
/
மருத்துவக்கல்லுாரிகளில் சலவை பணிகள் பாதிப்பு
ADDED : ஆக 15, 2025 12:35 AM
விருதுநகர்:புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் சலவை பணிகள் தனியார் வசம் விடப்பட்டுள்ளன. அதில் ஆட்கள் பற்றாக்குறையால் ஒரு நோயாளி பயன்படுத்திய படுக்கை விரிப்புகளை மற்றவர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன. 12 ல் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இவற்றில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் 1200க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. உள்நோயாளிகளின் படுக்கைகளில் விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள், அறுவை சிகிச்சை அரங்குக்கான சீருடைகள், டாக்டர்களுக்கான சீருடைகள் உள்பட அனைத்து மருத்துவமனை துணிகளையும் தினமும் சலவை செய்த தர 220 நிரந்தர சலவை பணியாளர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக தனியார் மூலம் 5க்கும் குறைவான பணியாளர்களே பணிபுரிகின்றனர். ஆட்கள் பற்றாக்குறையால் படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் மூடை மூடைகளாக தேங்கி கிடக்கிறது.
ஒரு உள்நோயாளி பயன்படுத்திய விரிப்புகள், போர்வைகள், தலையணை உறைகள் ஆகியவற்றை சலவை செய்யாமல் அப்படியே மற்ற உள்நோயாளிகளுக்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் காலியாக உள்ள 220 நிரந்தர சலவை பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.