சாய்ந்த சுற்றுச்சுவரால் முதல்வர் கோப்பை போட்டிக்கு பாதுகாப்பின்மை
சாய்ந்த சுற்றுச்சுவரால் முதல்வர் கோப்பை போட்டிக்கு பாதுகாப்பின்மை
ADDED : செப் 17, 2026 05:52 PM
விருதுநகர்: விருதுநகரில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு விரிவாக்கத்திற்காக வடிகாலையொட்டி அப்புறப்படுத்திய மண்ணை மாவட்ட விளையாட்டு அரங்க சுற்றுச்சுவர் அருகே கொட்டி வைத்ததால் சுவர் சாய்ந்து ஒன்றரை மாதம் ஆகிறது. தற்போது முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. சர்வீஸ் ரோட்டையும் விரிவாக்கம் செய்துள்ளனர். அப்பகுதியில் தோண்டிய மண்ணை அகற்றி வடிகாலுக்கு அடுத்து உள்ள மாவட்ட விளையாட்டு அரங்க சுற்றுச்சுவரை யொட்டி கொட்டி சென்றனர். அழுத்தம் காரணமாக அரங்க சுற்றுச்சுவர் சேதமாகி சாய்ந்து விட்டது. இதை சுற்றுச்சுவர் ஓரங்களிலும் கொட்டி உள்ளதால் நீச்சல் குள சுற்றுச்சுவரும் விரிசல் விட்டுள்ளது.
தற்போது முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. சுற்றுச்சுவர் விழுந்துள்ளதால் பாதுகாப்பின்மை உள்ளது. சர்வீஸ் ரோட்டை யொட்டி வேறு உள்ளதால் வெளிநபர்கள் நின்று விளையாட்டு போட்டிகளை பார்க்கின்றனர்.
எனவே கலெக்டர் தலையிட்டு விரைவில் சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிற பகுதிகளில் சுற்றுச்சுவரை யொட்டி அழுத்தம் தரும் வகையில் கொட்டிய மண்ணை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
