ஸ்ரீவில்லிபுத்துார்: அடைபட்டுள்ள மடைகள், பழுதான ஷட்டர்கள், சேதமடைந்த தடுப்பு சுவர், மண்ணிற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், நெல் களம் ஆக்கிரமிப்பு என பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது.
மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய் ஆன ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. 4.5 கி.மீ. தூரத்திற்கு கரைகளைக் கொண்ட இந்த கண்மாய் 650 ஏக்கர்பரப்பளவு நீர் பிடிப்பு பகுதியை கொண்டது.
இதன் மூலம் 800 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பேயனாறு, அணைத்தலையாறு வழியாக மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து பெரியகுளம் கண்மாய்க்கு வருகிறது.
திருமுக்குளம் தென்கரையின் பிரதான கலிங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர் நகரின் மையப் பகுதியில் உள்ள ஓடைகளின் வழியாக செங்குளம், சோளங்குளம், தெய்வேந்திரி, அத்திகுளம், நொச்சிகுளம் கண்மாய்களுக்கு செல்கிறது.
இந்நிலையில் கண்மாயின் 1வது மடை ஆண்டாள் தியேட்டர் அருகில் தேசிய நெடுஞ்சாலை பாலம் விரிவாக்கத்தின் போது தண்ணீர் வெளியேறும் மடை தொட்டி அடைபட்டு குளத்து தண்ணீர் விவசாய பாசனத்திற்கு கிடைக்காத நிலை உள்ளது.
வைத்தியநாதசுவாமி கோயில் அருகே உள்ள 2வது மடை தேசிய நெடுஞ்சாலையின் அடியில் குளத்தில் தண்ணீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குளத்து தண்ணீர், பாசனத்திற்கும் சிவன் கோயில் தெப்பகுளங்களுக்கும் கிடைக்காத நிலை உள்ளது. குளத்து தண்ணீர் வெளியேற்ற பயன்படும் ஷட்டர்கள் துருப்பிடித்து பழுதான நிலையில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
திருமுக்குளம் தென்கரையில் மறுகால் ஓடையில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தடுப்புச் சுவர்கள் பழுதாகி இடிந்து விழுந்துஉள்ளதால் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
கண்மாய் மறுகால் ஓடையில் ஆகாயத்தாமரைகள், குப்பைகள் கொட்டப்பட்டு தரைப் பாலத்தின் கண்கள் அடைப்பட்டு கிடக்கிறது. மேலும் குடிநீர் குழாய்கள் ஓடையின் குறுக்கே செல்வதால் குளத்து தண்ணீர் வெளியேறமுடியாமல் கரை பலவீனப்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலரத வீதி, தெற்கு ரத வீதி, ராஜபாளையம் ரோடு பகுதியில் உள்ள வீட்டு கழிவுநீர் மடையின்வழியாக செல்வதால் பாசனத்திற்கு உகந்ததாக தண்ணீர் இல்லாதநிலை உருவாகி வருகிறது. விவசாயிகளுக்கு தோல் நோய், அரிப்பு போன்ற நோய்கள் பரவும் நிலையுள்ளது. விளைபொருட்கள் உலர வைக்கும் களத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குறைபாடுகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
மராமத்து பணி செய்ய வேண்டும்
மோகன்ராஜ், பெரியகுளம் கண்மாய் பாசன சங்க தலைவர்: 1, 2 மடைகளில் கழிவுகள் அடைப்பட்டு கிடக்கிறது. இதனை முழு அளவில் தூர்வார வேண்டும். கண்மாயில் மராமத்து பணிகள் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது.அதனை சரி செய்து தர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வரத்து பாதையில் அடைபட்டுள்ள செடி, கொடிகளை சுத்தம் செய்து வேண்டும்.
ஆக்கிரப்புகளைஅகற்ற வேண்டும்
முனீஸ்வரன், பெரியகுளம்கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்: பெரியகுளம் கண்மாய் விவசாயிகளின் விளைபொருள்களை வைப்பதற்கான நெல் களம் ஆக்கிரமிக்கப்பட்டுஉள்ளது. இதனை முழு அளவில் அகற்ற வேண்டும். கருப்பசாமி கோவில் கலிங்கல் ஷட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.