ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகுலராமபேரி கண்மாய் நீர்வரத்து ஓடைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள்வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால்கழிவு நீர் தேங்கும் கண்மாயாக மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அலுவலகம் எதிரிலும், என்.ஜி.ஓ. காலனி பின்புறத்திலும், செங்குளம் சிவகாசி ரோட்டுக்கு மேல் புறத்திலும் அமைந்துள்ளது இந்த ராஜகுலராமபேரி கண்மாய்.
பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் நீர்வரத்து ஓடையின் வழியாக வரும் மழைநீர் முதலியார்பட்டி தெருவில் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி செங்குளம் கண்மாய்க்கும், மறுபகுதி ராஜாகுலராமபேரி கண்மாய்க்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து கால்வாய்கள் உள்ளது.
இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதன் மூலம் நெல், பருத்தி, தென்னை வாழை விவசாயம் நடந்து வந்தது.
ஆனால், அதிகரித்து வரும் குடியிருப்பின் காரணமாக தற்போது பல ஏக்கர் விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவிட்டது. இதனால் இக்கண்மாய் பராமரிப்பின்றி கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.
முதலியார்பட்டி தெருவில் இருந்து பிரிந்து சிவகாசி-செங்குளம் ரோட்டில்மேல் பகுதி வழியாக கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடை தற்போது ஆள் உயரத்திற்கு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் வீடுகளின் கழிவுகள் கொட்டப்பட்டு நீர் வரத்து பாதைகள் அடைபட்டு வருகிறது. தடுப்பணை தெரியாத அளவிற்கு நீர் வரத்து ஓடை புதர் மண்டி காணப்படுகிறது.
என்.ஜி.ஓ காலனி பின்புறம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதி இடங்களில் கருவேலம் மரங்கள் வளர்ந்தும், மண்மேவியும் காணப்படுகிறது.
நெசவாளர் காலனி, கிருஷ்ணா நகர், பருத்தி ஆராய்ச்சி நிலையம் உட்பட பல்வேறு பகுதி விவசாய நிலங்கள் தற்போது குடியிருப்பு பகுதியாக மாறி வருவதால் கண்மாயின் வரத்து கால்வாய்கள் சேதமடைந்துள்ளது.
கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள இக்கண்மாயின் கரை உடைந்து கிருஷ்ணன் கோவில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது கரை சீரமைக்கப்பட்டாலும் கண்மாயை முழு அளவில் தூர்வாரி கரையை மேம்படுத்த வேண்டும்.
கழிவுகள் அதிகம் சேர்வதால் விஷப்பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது எளிதாக வந்து செல்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கண்மாயின் நீர் வரத்து பாதை, நீர் வெளியேறும் பாதை, நீர் பிடிப்பு பகுதிகளிலும் முழு அளவில் சீரமைத்து பாதுகாத்தால் தற்போது விவசாயம் நடக்கும் நிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும், நகரின் நிலத்தடி நீர் மட்டுமே அதிகரிக்கும் எனவே இந்த கண்மாயை முழு அளவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள், குடியிருப்பாளர்களின் கோரிக்கையாகும்.
ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும்
காசி, விவசாயி: பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்து செங்குளம் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து பாதையில் சிவஞானபுரம் தெருவிற்கு பின் பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் முதலியார் பட்டி தெருவில் இருந்து கண்மாய் வரை உள்ள நீர் வரத்து பாதையை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் இந்த கண்மாய் மீண்டும் பாசன வசதி பெறும்.
விஷ பூச்சிகள் நடமாட்டம்
குருசாமி, குடியிருப்பாளர்: முதலியார்பட்டி தெருவில் இருந்து சிவகாசி ரோடு, பட்டுப்பூச்சி அலுவலகம் வழியாக கண்மாய் வரை உள்ள நீர்வரத்து பாதையில் செடி கொடிகள் அதிகம் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக மழைநேரங்களில் மக்கள்அதிக சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே இந்த கண்மாயின் நீர் வரத்து பாதையை முழு அளவில் சுத்தம் செய்தும்தூர்வாரி சீரமைக்க வேண்டும்.