கரையில் உடைப்பு, நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு:ஆத்திப் பட்டி கண்மாய் பாசன விவசாயிகள் அவதி
கரையில் உடைப்பு, நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு:ஆத்திப் பட்டி கண்மாய் பாசன விவசாயிகள் அவதி
UPDATED : அக் 07, 2026 04:41 PM
ADDED : அக் 07, 2026 04:36 PM
சாத்துார்: ஆத்திப்பட்டி கண்மாயில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணி நடக்காததால் தென் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக கண்மாய்க்கு குறைந்த அளவு தண்ணீர் வருவதால் விவசாய பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்திப்பட்டி கண்மாய் பாசனத்தின் மூலம் நுாறு ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. முத்துச்சாமிபுரம் கண்மாய் நிறைந்து ஆத்திப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் வகையில் நீர்வரத்து ஓடை உள்ளது. இந்த நீர்வரத்து ஓடை முழுவதும் தற்போது தனியார் ஆக்கிரமித்து மணலை கொட்டி தங்கள் நிலத்திற்கு பாதை அமைத்துக் கொண்டுள்ளனர். இதனால் பெருமழை பெய்தாலும் நீர்வரத்து ஓடையின் வழியாக கண்மாய்க்கு தண்ணீர் வராமல் காட்டுப்பகுதிக்குள் சென்று வீணாகி வருகிறது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாயில் பராமரிப்பு பணிகள் நடை பெறாத நிலையில் கண்மாய்க்கு முள்செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. கல் மதகு பழுதால் தற்போது விவசாயிகள் மதகை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
மேலும் இதன் அருகிலேயே கண்மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிக அளவு மழை நீர் வந்தால் இந்த உடைப்பு வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இக்கண்மாயின் மூலம் தண்ணீர் பாசனம் செய்ய முடியாததால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தை மானாவார நிலமாக மாற்றி மக்காச் சோளம், சோளம், பருத்தி, எள், பாசி பயறு விளைவித்து வருகின்றனர்.
தற்போது பெய்த மழைக்கு கண்மாய்க்கு சிறிதளவு தண்ணீர் வந்துள்ளது. இந்த தண்ணீர் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்மாயை துார்வாரி கரைப்பகுதிகளை பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்செடிகள் அகற்ற வேண்டும்
கண்மாயை துார்வாரி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது கண்மாய்க்குள் முள்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மழைநீர் வந்ததால் தண்ணீரில் மூழ்கியுள்ளது. முள்செடிகளை அகற்றி ஆழப்படுத்த அதிகாரிகள் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கண்மாயில் குளிப்பவர்களை முள்செடிகள் காயப்படுத்தி வருகின்றன.
ராஜா, விவசாயி.
நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு
ஆத்திப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடை முழுவதும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால் கன்மாய்க்கு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது.100 நாள் வேலை திட்டத்தில் கண்மாய் நீர்வரத்து ஓடையை துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமனாதன், விவசாயி.
மதகு பழுது
கண்மாயில் மதகு பழுதாக உள்ளது. மேலும் பாசனக் கால்வாயும் சேதமடைந்துள்ளது. இதனால்கண்மாய் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. மதகு பழுதை சரி செய்து பாசனக் கால்வாயை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணி, விவசாயி.
மரங்களால் கரைகள் பலம் பெறும்
ஆத்திப் பட்டி மற்றும் முத்துச்சாமிபுரம் கிராமங்களின் நீராதாரமாக இந்த கண்மாய் உள்ளது.கடும் கோடை காலத்தில் கண்மாயில் உள்ள அடி குழாய் மூலம் குடிநீர் எடுத்து வருகிறோம்.கண்மாய் கரையும் முழுவதும் புளியமரங்கள் இருந்தன. தற்போது இந்த மரங்களில் எண்ணிக்கை குறைந்து வருகிறது.புளிய மரம்,நாவல், அரசு,வாகை உள்ளிட்ட மரங்கள் வளர்த்தால் கரையும் பலப்படும்.தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கரை உடைப்பை சரி செய்யவும் அதிகாரியை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், விவசாயி.
