UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 04:25 PM
ஆக்கிரமிப்பு, கொட்டப்படும் கழிவுகள், கருவேல மரங்கள்
*விரக்தியில் ஸ்ரீவி., வடமலைகுறிச்சி கண்மாய் விவசாயிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடமலைகுறிச்சி கண்மாயில் ஆக்கிரமிப்பு, கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள் வளர்ந்தும், கொட்டப்படும் கழிவுகள் , நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் மண்டியும், கரைகள் மேடு பள்ளமாகவும் இருப்பதால் பாசன விவசாயிகள் வேதனையடைந்துள்னர்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாய் மூலம் 400 ஏக்கரில் நெல், வாழை, பருத்தி, மற்றும் பூச்செடிகள் பயிரிடப்பட்டு வந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் கண்மாய்க்கு பெருமாள்பட்டி வழியாகவும், ரெங்கர் கோயிலில் இருந்து கூட்டுறவு மில் வழியாகவும் மழை நீர் வரும் வகையில் நீர்வரத்து ஓடைகள் உள்ளது.
இதில் மொட்டைபெத்தான் கண்மாயிலிருந்து குலாலர் தெரு, பெருமாள்பட்டி வழியாக வரும் நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
மதுரை ரோடு பாலத்தின் மேல் பகுதி நீர்வரத்து ஓடையில் தூர்வாரப்பட்ட நிலையில், கிழக்கு பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது.
கண்மாய் முழு அளவில் நிரம்பினால் பெரும்பள்சேரி, சண்முகசுந்தரபுரம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கலிங்குகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும்.
ஆனால் கண்மாயின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் கருவேல மரங்கள் வளர்ந்து நீர் வரத்து பாதைகள் அடைபட்டு கிடக்கிறது. மேலும் கண்மாயின் பல பகுதிகளில் தனி நபர்கள் ஆக்கிரமித்து பரப்பளவே சுருங்கி வருகிறது.
இந்த கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்தால் செங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து பாதையும் மண் மேவியும், போதிய ஆழமின்றியும் காணப்படுகிறது. இதனால் கனமழை நேரங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது.இதனால் பல ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாத நிலை உள்ளது.
கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் பல வயல்களில் விவசாயம் நடைபெறாமல் ஒரு காலத்தில் பசுமை சோலையாய் இருந்த வயல்கள் எல்லாம் இன்று முட்செடிகள் வளர்ந்து பயனற்ற நிலைக்கு ஆளாகி வருகிறது.
எனவே, கண்மாயை முழு அளவில் தூர்வாரியும், நீர்வரத்து பாதைகளை சுத்தம் செய்தும், கரைகளை பலப்படுத்தி முறையாக பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்துார் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
சேதமான நீர்வரத்து கால்வாய்கள்
வடமலைக்குறிச்சி கண்மாய் பாசனத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு வருகின்றனர். ஆனால் கரைகள் பலவீனமாகவும், கண்மாயின் உட்பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்தும், வயல்களுக்கு தண்ணீர் வரும் பாசன கால்வாய்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்து தந்தால் தான் விவசாயிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். இதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமார், விவசாயி.
* தூர்வார வேண்டும்
வடமலைகுறிச்சி கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், கழிவுகள் கொட்டப்பட்டும், செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் மண்டி கழிவு நீர் குளமாக காணப்படுகிறது. கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் வளர்ந்து மண் மேவி தண்ணீர் தேங்காத நிலை காணப்படுகிறது.
எனவே கண்மாயை முழு அளவில் தூர்வார பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவிந்தராஜ், விவசாயி.
