/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்
/
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்
சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் செயல்படாத லிப்ட்
ADDED : ஜூலை 27, 2025 03:48 AM

சிவகாசி: சிவகாசி அரசு காப்புறுதி தொழிலாளர் (இ.எஸ்.ஐ.,) மருத்துவமனையில் கட்டடங்கள் சேதமடைந்து இருப்பதால் இங்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் செயல்படாத லிப்டினால் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி ஆனையூரில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை 1987ல் 50 படுக்கை வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2000 ல் 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒரு லட்சத்து 93 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் 200 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 50 பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது மருத்துவ சேவை, பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குடும்ப நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவம் ஆகியவை சிறப்பு டாக்டர்களால் வழங்கப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவ வசதியும் உள்ளது. மேலும் உயர் ரக ரத்தப் பரிசோதனை கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, அல்ட்ரா சோனோகிராம், இசிஜி, லேப்ராஸ்கோப்பி உள்ளன.
மாரடைப்பு வந்தால் அதற்கு உடனடியாக போட வேண்டிய மருந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆஞ்சியோகிராபிக், ஆஞ்சியோ பிளாஸ்டி அல்லது பைபாஸ் சர்ஜரி போன்ற சிறப்பு சிகிச்சைகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும், கட்டடம் கட்டப்பட்டு 36 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது அனைத்து இடங்களிலும் கட்டடம் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே சுவற்றில் விரிசல் ஏற்பட்டு சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நிற்கின்றது. கட்டடத்தில் முன்புறம் சேதம் அடைந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளால் நோயாளிகள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து கட்டடத்தின் உள்ளேயும் இறங்குகின்றது. இதனால் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மூன்று தளம் கொண்ட மருத்துவமனையில் 20 ஆண்டுகளாக லிப்ட் செயல்படவே இல்லை. இதனால் சிகிச்சைக்காக வருகின்ற வயதானவர்கள், காயமடைந்தவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைத்து, லிப்டினையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.