ADDED : ஜன 04, 2024 01:39 AM
ராஜபாளையம்; ராஜபாளையத்தில் இயங்கும் பஸ்களில் அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர் பயணிப்போரின் காதுகளை பதம் பார்த்து வருகிறது. போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு காண எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் பஸ்களில் 'ஆடியோ சிஸ்டம்' மூலம் பாடல்களை ஒலிக்க விடுகின்றனர். இதில் தனியார் பஸ் நிறுவனங்கள் ஒரு படி மேலே சென்று வாடிக்கையாளர்களை கவர்கிறோம் என்ற பெயரில் வண்ண விளக்குகளால் காதுகளை செவிடாக்கும் வகையில் ஸ்பீக்கர்களில் பாடல்களை அலற விடுவதும் அதிகரித்து வருகிறது.
இந்த பஸ்களில் பயணிக்கும் கர்ப்பிணிகள், முதியோர், பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது பற்றி பயணிகள் டிரைவர் கண்டக்டர்களிடம் கோரிக்கை வைத்தாலும் அவர்கள் செவி சாய்ப்பது இல்லை. இது குறித்து சங்கர்: கடந்த காலங்களில் பயணத்தின் போது பாடல்கள் கேட்க அனைவரும் விரும்பிய நிலை இருந்தது. தற்போதைய டிஜிட்டல் யுகத்திலும் பயணியரின் மனநிலையை அறியாது இதே நிலையை தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அலைபேசி வைத்து விருப்பமான பாடல்களை ஹெட்போன் மூலம் தங்களுக்கு மட்டும் கேட்டு ரசிக்கும் நிலையில் ஸ்பீக்கர்களை அலற விடுவதை சம்பந்தப்பட்ட பஸ் நிர்வாகங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் இதுகுறித்து ஆய்வு செய்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.