/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெண்டர் விட்டும் செப்பனிடாத மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்
/
டெண்டர் விட்டும் செப்பனிடாத மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்
டெண்டர் விட்டும் செப்பனிடாத மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்
டெண்டர் விட்டும் செப்பனிடாத மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 08, 2024 03:52 AM
காரியாபட்டி: மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலை டெண்டர் விடப்பட்டும் கண்டும் பராமரிக்காததால் குண்டும் குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி துறைமுகம், திருச்செந்தூர் முருகன் கோயில் என போக்குவரத்து மிகுந்து காணப்பட்டதால் மதுரை -துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி புதூர்பாண்டியபுரம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் நிர்வகித்தது.
இந்த வழித்தடத்தில் அடிப்படை வசதி கேள்விக்குறியாக இருந்தது. சர்வீஸ் ரோடு இல்லை. முக்கிய பிரிவு ரோடுகளில் பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோக காரணமாக அமைந்தது. விளக்குகள் சரிவர எரியவில்லை. கழிப்பிட வசதி, ஓய்வு அறை இல்லை.
டிவைடரில் அரளிச்செடிகள் போதிய அளவு இல்லை. இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகளால் எதிர் எதிரே வரும் வாகன ஓட்டுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பிரிவு ரோடுகளில் சிக்னல் விளக்குகள் கிடையாது. இரவு நேரங்களில் வழி மாறி சென்று பலர் பரிதவிக்கும் நிலை இருந்து வருகிறது. இதுபோன்று பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து தனியார் நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ரோடு படுமோசமாக ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்களாக உள்ளன. அடிக்கடி பழுதாகி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதிக அளவு வாகனங்கள் சென்று வருவதால் ரோடு பிதுங்கி, வாகனங்கள் தட்டு தடுமாறி ஓடுவதால், வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மதுரையில் இருந்து 2 மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை 4 மணி நேரங்கள் கடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்நிலையில் கட்டணம் உயர்த்தப்பட்ட போது ரோடு பராமரிக்காமல் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்கிற எதிர்ப்புக் குரல் எழுந்ததையடுத்து மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள டோல்கேட்டில் மட்டும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் உடனடியாக பராமரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.
டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதை குறியாக கொண்டுள்ளனரே தவிர அடிப்படை வசதிகளை செய்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. டோல்கேட்டில் 4 கவுண்டர்களில் இருபுறத்திலும் 2 கவுண்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. ஆத்திர அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரோடு சீரமைக்க டெண்டர் விடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. 2 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு பணியும் துவக்கப்படவில்லை.
நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. ரோடு படுமோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆகவே உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

