/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி
/
சிவகாசியில் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி
ADDED : டிச 05, 2024 05:30 AM

சிவகாசி: சிவகாசி தாலுகாவில் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர். மேலும் காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சிவகாசி தாலுகாவில் மக்காச்சோளம், நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. தற்போது இப்பகுதியில் நெல், மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் மானாவாரியிலும் கிணற்று பாசனத்திலும் 2650 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
உழவு செய்தல், விதைத்தல், உரம்இடுதல், களை எடுத்தல் என இதுவரையிலும் ஒரு ஏக்கருக்கு ரூ. 22 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. சமீபத்தில் இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக மக்காச்சோளம் பயிரில் பூவிட்டு காய் வைக்கும் பருவத்தை எட்டியுள்ளது. அடுத்தடுத்து மழை இல்லாததால் பயிர்கள் கருகி விட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பயிரில் காய் வைக்கும் பருவத்தை எட்டி உள்ளதால் காட்டுப்பன்றிகள் தங்கள் உணவிற்காக மக்காச்சோளம் பயிர்களை அழித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால் பயிர்கள் முழுமையாக நாசமாகிவிடும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சீனிவாசன், விவசாயி, சித்தமநாயக்கன்பட்டி: தற்போதைய நிலை வரை மக்காச்சோள பயிர்கள் காய் வைத்து நல்ல நிலையில் உள்ளது. அதே சமயத்தில் அடுத்தடுத்து மழை பெய்யாவிட்டால் பயிர்கள் வீணாக கருகி விட வாய்ப்பு உள்ளது. கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் ஓரளவிற்கு தப்பிக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் மானாவாரியில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழை இல்லாமல் அழிந்துவிடும். தவிர காட்டுப்பன்றிகளாலும் பெரும்பான்மையான பயிர்கள் அழிந்து வருகின்றது.
எனவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.