/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் மல்லாங்கிணர் புற வழிச்சாலை
/
கிடப்பில் மல்லாங்கிணர் புற வழிச்சாலை
ADDED : ஜன 22, 2025 06:10 AM
காரியாபட்டி : மல்லாங்கிணரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புற வழிச்சாலை திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக நிலம் அளவீடு செய்யப்பட்டதோடு சரி, கிடப்பில் உள்ளது. விரைவில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் போக்குவரத்து வசதி, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வேலைக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அங்கு குடியேறி வருகின்றனர். மக்கள் பெருக்கத்தால் பஜாரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல பஜாரில் இரு புறங்களிலும் கடைகள் உள்ளதால், கடைக்கு வருபவர்கள் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர்.
இரு வாகனங்கள் விலகிச் செல்ல படாத பாடு படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வரலொட்டியில் துவங்கி துலுக்கன்குளம், திம்மன்பட்டி, மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக புறவழிச் சாலை அமைக்க 3 முறை நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதோடு சரி பல மாதங்களாக திட்டத்திற்கான பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது.
போக்குவரத்து நெருக்கடியால் ஒவ்வொரு நாளும் மல்லாங்கிணரை கடப்பதற்குள் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஓட்டுனர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதனை சமாளிக்க புறவழிச் சாலை திட்டத்தை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.