/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வக்கீலை தாக்கி செயின் பறித்து தலைமறைவானவர் கைது
/
வக்கீலை தாக்கி செயின் பறித்து தலைமறைவானவர் கைது
ADDED : மார் 23, 2025 07:17 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வக்கீலை கத்தியால் குத்தி 10 பவுன் செயினை பறித்த வழக்கில் தலைமறைவான வாலிபரை 7 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரைச் சேர்ந்த வக்கீல் பாஸ்கரன் 43. இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் நேதாஜிநகர் ரோட்டில் காரில் இருந்த போது ஒரு கும்பல் அவரை கத்தியால் தாக்கி அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து தப்பினர். பலத்த காயமடைந்த பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பாஸ்கரன் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மணிமுருகன் தூண்டுதலின் பேரில் முனியசாமி 25, அன்புகணேஷ், விக்னேஷ் ஆகியோர் தன்னை தாக்கி செயினை பறித்ததாக போலீசில் புகார் செய்தார். முனியசாமியை தவிர மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஏழு மாதங்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த முனியசாமி மதுரையில் இருந்து துாத்துக்குடிக்கு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., ஜோதிமுத்து மற்றும் போலீசார் ராமசாமிபுரம் விலக்கு அருகில் வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற முனியசாமியை கைது செய்தனர். அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் முனியசாமி ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டார்.