/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் விபத்துக்கு வித்திடும் மேன்ஹோல்கள்
/
விருதுநகரில் விபத்துக்கு வித்திடும் மேன்ஹோல்கள்
ADDED : பிப் 13, 2024 05:18 AM

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் பாதாளசாக்கடை மேன்ஹோல்கள் சில இடங்களில் மேடு, பள்ளமாகவும், பல இடங்களில் சேதம் அடைந்தும் உள்ளன. இவற்றால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி திண்டாடுகின்றனர்.
விருதுநகர் நகராட்சியின் 36 வார்டுகளில் பாதாளசாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேற்கு, கிழக்கு பாண்டியன் காலனிகள் உள்ளிட்ட பகுதிகளில் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நகரின் முக்கால்வாசி பகுதிகளில் மேன்ஹோல்கள் அதிகளவில் உள்ளன. 50 மீட்டர் துாரத்திற்கு ஒரு மேன்ஹோல் என்ற வகையில் நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர ஊராட்சி பகுதிகளான கூரைக்குண்டு, சிவஞானபுரம், ரோசல்பட்டி ஆகியவற்றின் எல்லை பகுதிகளிலும் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல மேன்ஹோல்கள் பள்ளமாக சற்று உள்ளே போய் உள்ளன. இவற்றால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளமான மேன்ஹோலில் இறங்கி செல்கின்றன.
அதிர்வால் சில நேரங்களில் மூடிகள் நொறுங்கி உடைகின்றன. அதே போல் வாடியான் தெரு, சாத்துார் ரோடு, அல்லம்பட்டி தெரு பகுதிகளில் பல மேன்ஹோல்கள் உயரமாக காணப்படுகின்றன. அதாவது ரோட்டின் மட்டத்தை விட உயர்ந்து காணப்படுகின்றன. இந்த மேன்ஹோல்களாலும் இரவில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். கவனம் தப்பினால் நிச்சயம் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவர்.
இதே போல் புதிய ரோடு பணியின் போது புதிதாக அமைக்கப்பட்ட பல மேன்ஹோல்கள் மிக விரைவில் சேதமடைந்துள்ளன. தரமற்ற இந்த மேன்ஹோல்களால் பலர் விபத்தை சந்தித்துள்ளனர்.
விருதுநகர் பாதாளசாக்கடை திட்டம் கழிவுநீர் மேலாண்மையில் சொதப்பி வருவது போல் அதன் மேன்ஹோல்களின் பாதகமான செயல்பாடுகளாலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. மக்கள் எங்கேங்கே மேன்ஹோல்கள் இருக்கும் என்று எண்ணி அதற்கேற்ப வாகனங்களை ஓட்ட துவங்கி விட்டனர். மேன்ஹோல் மூடி உடை குழி தெரிந்தாலும் புகார் சொல்ல யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு புகார்கள் மீது காட்டப்பட்ட அலட்சியத்தால் மக்கள் விரக்தியில் உள்ளனர்.
ஆகவே நகராட்சி நிர்வாகம் சேதமடைந்துள்ள மேன்ஹோல்களை சரி செய்யவும், அனைத்து தெருக்கள், ரோடுகளில் சமமாக இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.