ADDED : ஜன 30, 2024 07:13 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் பணப் பிரச்சனையில் தாய் களஞ்சியத்தை 67, கொலை செய்த மகன் ஹரிகரனுக்கு 33, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணர் அண்ணா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி களஞ்சியம், இவருக்கு சதீஷ்குமார், 37, ஹரிகரன், என இரு மகன்கள் உள்ளனர்.
இதில் சதீஷ்குமார் திருமணம் முடித்து தனியாக வசிக்கிறார். ஹரிஹரன் தாய் களஞ்சியத்துடன் வசித்து வந்தார். தனது அன்றாட செலவுகளுக்கு தாயிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார்.
இந்நிலையில் தாய் களஞ்சியம் மூத்த மகன் சதீஷ்குமாருக்கு, கடனை அடைக்க ரு 2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அதில் பங்கு கேட்டு 2021 அக். 12 இரவு 10:00 மணிக்கு ஹரிகரன் தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதனை சதீஷ்குமார் கண்டித்துள்ளார். தனக்கு இன்றைக்குள் பணம் தராவிட்டால் தாயை குத்தி கொன்றுவிடுவேன் என ஹரிகரன் கூறியுள்ளார். மறுநாள் மதியம் சதீஷ்குமார் வந்து பார்க்கும்போது, தாய் களஞ்சியம் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
மல்லாங்கிணர் போலீசார் ஹரிகரனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ஹரிகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.