ADDED : ஜன 17, 2024 12:44 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், சாத்துார், காரியா பட்டி உள்ளிட்ட நகர் பகுதிகள், அதனை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் நேற்று மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விருதுநகரை சுற்றியுள்ள சத்திரரெட்டியப்பட்டி, செங்குன்றாபுரம், ஆமத்துார், வச்சக்காரப்பட்டி, வீரசெல்லையாபுரம், அழகாபுரி, தாதம்பட்டி, மீசலுார், பாவாலி உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதியாக விளங்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
இதற்காக மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மாடுகளுக்கு கரும்புகளை உட்கொள்ள கொடுத்து மகிழ்ந்தனர்.
*அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோமாதாவிற்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் நடந்தது. அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, செம்பட்டி, புலியூரான், திருவிருந்தாள்புரம் உட்பட கிராமங்களில் கால்நடைகள் குளிக்க வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர். மாட்டுப்பொங்கலையொட்டி பல்வேறு விதமான போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

