/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி 34 பேர் படுகாயம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி 34 பேர் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி 34 பேர் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்துாரில் மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி 34 பேர் படுகாயம்
ADDED : செப் 28, 2024 02:19 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள மம்சாபுரத்தில் இருந்து, 35க்கும் மேற்பட்ட பயணியருடன் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு மினி பஸ் புறப்பட்டது.
காலை 8:10க்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க, டிரைவர் மைக்கேல்ராஜ், 34, பஸ்சை இடதுபுறம் ஒதுக்கினார். அப்போது, பஸ் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், பிளஸ் - 2 படிக்கும் மாணவர் நிதீஷ்குமார், 17, ஒன்பதாம் வகுப்பு மாணவர் வாசுராஜ், 14, கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர் சதீஷ்குமார், 20, பல்கலை ஊழியர் மாடசாமி, 28, ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் உட்பட, 34 பேர் படுகாயமுற்றனர்.
கண்டக்டர் கவியரசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. டிரைவர் மைக்கேல் ராஜ் காயமின்றி தப்பினார்.
போலீஸ் மற்றும் வருவாய் துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின், மம்சாபுரம் போலீசார், அந்த மினி பஸ் டிரைவர் மைக்கேல் ராஜை கைது செய்தனர்.
அவரின் டிரைவிங் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதாக, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியான மாணவர் நிதீஷ் குமார், கைப்பந்து போட்டியில் மாநில அளவிலான விளையாட்டு வீரர். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிக்கும் தேர்வு பெற்று உள்ளார்.
சிவகங்கையில் இன்று நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலையில், விபத்தில் அவர் பலியானார்.
விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர், அவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு, 50,000 ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.