/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லிகைக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவை
/
மல்லிகைக்கு குறைந்தபட்ச ஆதார விலை தேவை
ADDED : ஜூன் 19, 2025 11:55 PM
அருப்புக்கோட்டை மல்லிகைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., கனகராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
ராம் பாண்டியன்: அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லிகை கொள்முதல் செய்யும் போது மல்லிகைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வரதராஜன், பொம்மகோட்டை: பொம்மகோட்டை முத்துராமலிங்கபுரம் வழியாக கொப்புசித்தம்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. அதை புதியதாக அமைத்து தர வேண்டும்.
கண்ணன், புளியம்பட்டி: அருப்புக்கோட்டை -விருதுநகர் ரோடு எல்லையில் புதியதாக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலையில் கட்டப்பட்டுள்ள பாலங்களில் இருபுறமும் மழைநீர் செல்லாத வகையில் மண் அடைபட்டு போய் உள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், பரளச்சி: இசலி ஊராட்சி குமிலங்குளம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 6 மாதத்திற்கு முன்பு கலெக்டரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்கவில்லை.
மச்சேஸ்வரன்: அரசு புறம்போக்கு நிலங்கள் நீர் நிலைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களின் இடையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளன. விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு பன்றிகளை விரட்டுவதற்கு அடர்த்தியாக வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இவற்றை யார் வேண்டுமானாலும் அகற்றலாம் என்ற உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.
ஜெயக்குமார், தண்டிய நேந்தல்: தண்டியநேந்தல் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே ஊருணி திறந்த நிலையில் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. பள்ளி அருகே இருப்பதால் குழந்தைகள் விழும் அபாயம் உள்ளது. ஊருணியை சுற்றி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.
சிவசாமி, முடுக்கன்குளம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பி.டி.ஓ., க்கள் பங்கேற்பதில்லை அவர்களுக்கு பதிலாக வேறு அலுவலர்களை அனுப்புகின்றனர். இதனால் விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு கிடைப்பது இல்லை.
இதை கேட்ட ஆர்.டி.ஓ.,: சென்ற கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என கூறியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு முறை கூட்டத்தில் கலந்து கொண்டால் போதுமானது என நினைக்கின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பின்படி நடக்கிறது இது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கண்டித்தார்.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிப்காட் பயன்பாட்டிற்காக நிலங்களை கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சென்ற கூட்டத்தில் நிலங்களை கையகப்படுத்த படாது என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், மீண்டும் கையகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நிலங்களை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.