/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காணாமல் போன ஊருணிகள், ரோடே இல்லாத கிராமம்
/
காணாமல் போன ஊருணிகள், ரோடே இல்லாத கிராமம்
ADDED : மார் 08, 2024 12:14 PM
திருச்சுழி: திருச்சுழி அருகே ஆலடிபட்டி ஊராட்சியில் பல ஆண்டுகளாக ரோடு இல்லாமலும், கல்குவாரிகளால் மாயமான ஊருணிகளால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆலடிபட்டி ஊராட்சி. இதற்குட்பட்டது மேல குருணைகுளம், கீழ குருணைகுளம், மீனாட்சிபுரம், ராமசாமிபட்டி உட்பட கிராமங்கள் ஆகும். இந்த பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். 100 ஏக்கரில் அமைந்துள்ள ஆலடிபட்டி கண்மாய், சுற்றிலும் 20 க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன. இவற்றின் மூலம் பாசன வசதி கிடைத்து விவசாயம் நன்கு இருந்தது.
ஊரில் ஒரு சில கல்குவாரிகள் இருந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் நீர்நிலைகளை சுற்றி 30 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் துவங்கப்பட்டன. லாரிகள் செல்வதற்காக கண்மாயில் ரோடும், 10 க்கும் மேற்பட்ட ஊருணிகளும் காணாமல் போய் விட்டன. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டது. ஊருக்குள் வர முடியாத அளவிற்கு லாரிகள் ரோட்டை சேதப்படுத்தி விட்டன. சுற்றியுள்ள கிராமங்கள் புழுதி காடாக மாறி விட்டன.
பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் பத்துக்கும் மேற்பட்ட கிணறுகள் வற்றிவிட்டன. ஆலடிபட்டியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இந்தப் பகுதியில் ஒரே ஒரு பஸ் தான் வந்து செல்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் 4 கி.மீ., நடந்து சென்று தான் படிக்கச் செல்கின்றனர். தெருக்களில் வாறுகால்கள் பல சேதமடைந்துள்ளன. பொது கழிப்பறைகள் இல்லை. நூலகம் இருந்தும் பயன் இல்லை. பூட்டியே கிடக்கிறது.
வி.ஏ.ஓ., கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் உட்பகுதியில் கட்டடம் விரிசல் கண்டுள்ளது. பொதுமக்கள் உள்ளே செல்ல பயப்படுகின்றனர். பெரிய கண்மாயின் நீர்வரத்து ஓடை அடைக்கப்பட்டுள்ளது. இதை பராமரித்து கண்மாய்க்குள் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடை இல்லாததால் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர்.
கல்லூரணியிலிருந்து ஆலடிபட்டிக்கு வரும் மெயின் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்து பல ஆண்டுகளாக உள்ளது. புதிய ரோடு அமைக்க பல முறை ஊராட்சியில் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.

