/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உடல் உறுப்பு தானத்தால் 10க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு
/
உடல் உறுப்பு தானத்தால் 10க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு
உடல் உறுப்பு தானத்தால் 10க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு
உடல் உறுப்பு தானத்தால் 10க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு
ADDED : அக் 16, 2025 11:55 PM

வி ருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 2022 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதில் மூளை, முதுகுத்தண்டு, சிறுநீர் பாதை, மார்பக புற்றுநோய், உடல் ஒட்டுறுப்பு போன்ற முக்கியமான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குவதால் 10க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அடைந்துள்ளனர். இதன் டீன் டாக்டர் த.ஜெயசிங் அளித்த விளக்கங்கள் இதோ...
படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளதா உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் 997ல் இருந்து 1276 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள், வெளி நோயாளிகள் அமர்வதற்காக 1000 நாற்காலிகள், தேவையான அலமாரிகள், அனைத்து வார்டுகளிலும் திரைச்சீலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இருந்த குடிநீர் பிரச்னைக்கு என்ன தீர்வு தினசரி தேவையாக லட்சம் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையை போக்க விலை கொடுத்து வாங்கும் நிலை இருந்தது. தற்போது நகராட்சியின் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தினசரி 4 லட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்படுகிறது.
புதிதாக மருத்துவ உபகரணங்கள் ஏதேனும் வந்துள்ளதா இங்கு மாதத்திற்கு ஒருலட்சத்திற்கும் மேலான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் விரைவான சிகிச்சை அளிக்க ரூ.50 லட்சத்தில் தானியங்கி உயிரிவேதியியல் அனலைசர், ஹார்மோன் அனலைசர் ஆகியவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிக அளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகள் வயிற்று பகுதிகள், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் செய்யப்படுகிறது. குடல், மூளை, முதுகுத்தண்டு, சிறுநீர் பாதை ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சைகள், மார்பக புற்றுநோய், உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகளும் செய்யப் படுகிறது.
பேஸ்மேக்கர் கருவி பொருத்தும் வசதி உள்ளதா ஆம் உள்ளது. இதய துடிப்பு குறைவான நோய்கள், அரளி விதை உட்பட சில வகை விஷம் உண்டதற்கான சிகிச்சைகள், மாரடைப்பு, இதய நோய்களால் பாதித்தவர்களுக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ்மேக்கர் கருவியில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.
என்னென்ன அரசு திட்டங்களில் பயன்பெறலாம் பாதம் பாதுகாப்போம், படுக்கைப்புண் பாதுகாப்பு, போதை மறுவாழ்வு மையம், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புக்கு முன் பரிசோதனைகள், சிகிச்சைகள் அரசு திட்டங்களாக உள்ளன. இதில் பயன்பெறலாம்.
உடல் உறுப்பு தானத்தால் பயனடைந்தவர்கள் விவரம் நடப்பாண்டில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த 3 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் அதிக உடல் உறுப்புகளை தானமாக பெற்றதற்காக மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றது.