/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் போடப்பட்ட முடுக்கன்குளம் துணை மின் நிலையம்
/
கிடப்பில் போடப்பட்ட முடுக்கன்குளம் துணை மின் நிலையம்
கிடப்பில் போடப்பட்ட முடுக்கன்குளம் துணை மின் நிலையம்
கிடப்பில் போடப்பட்ட முடுக்கன்குளம் துணை மின் நிலையம்
ADDED : பிப் 24, 2024 05:38 AM

காரியாபட்டி, : காரியாபட்டி முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. வரும் மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி முடுக்கன்குளம் பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, அடிக்கடி குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். போதிய மின்சாரம் இன்றி விவசாயத்தை தொடர முடியாமல்தவித்து வருகின்றனர்.
காரியாபட்டி துணை மின் நிலையத்திலிருந்து முடுக்கன்குளம், எசலிமடை வரை 20 கி.மீ., சுற்றளவுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காரியாபட்டி பகுதியில் அதிக அளவிலான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உருவாகி வருவதால் சீரான மின்சப்ளை வழங்க முடியவில்லை.
முடுக்கன்குளம் பகுதியில் மின் சப்ளை செய்வதில்பிரச்னை இருந்து வருகிறது. குறைந்த அழுத்தம் மின்சாரத்தால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. பழுது ஏற்பட்டாலும் முற்றிலும் மின்தடை செய்ய வேண்டியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு முடுக்கன்குளத்தில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தனியார் நிறுவனம் சார்பாக 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இது வரை எந்த ஒரு நடவடிக்கையும்இல்லை. பல மாதங்களாகியும் நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சீரான மின்சாரம் வழங்குவதோடு, சோலார் மின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
ஒரு வேளை மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால், இங்கிருந்து உடனடியாக மின் சப்ளை செய்ய முடியும். அவ்வாறு இருக்க, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது. தமிழக அரசு நிதி ஒதுக்கி, விரைந்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விவசாயம் பதிப்பு
சரவணப்பாண்டி, தனியார் ஊழியர்: லேசான மழை, காற்று வீசினாலே கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. எங்கேயாவது பழுது ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளும் இருளில் மூழ்குவதோடு இப்பகுதி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
முடுக்கன்குளத்தில் 110 கேவி மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கிடப்பில் உள்ளது. விவசாயத்தைகருத்தில் கொண்டு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜூ, தனியார் ஊழியர்: இத்திட்டம் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. சீரான மின்சாரம் கிடைப்பதுடன், தொழில் நிறுவனங்கள் வர வாய்ப்புஉள்ளது. இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த தொகுதியை சேர்ந்தவர் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பதால், நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தீர்வு: மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் வர வேண்டும் என்றால் அப்பகுதியில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும். காரியாபட்டியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தட்டுப்பாடான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இது பிரச்னைக்கு தீர்வு காண முடுக்கன்குளத்தில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். விரைவாக நிதி ஒதுக்கி பணிகளை துவக்க நடவடிக்கை எடுப்பதே உரிய தீர்வாக இருக்கும்.