/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறுகலான பாலங்களால் விபத்து அபாயம்
/
குறுகலான பாலங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 18, 2024 07:08 AM

சாத்துார், : சாத்துார் - -கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் அகலம் குறைவான பாலங்களால் நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
சாத்துார் - கோவில்பட்டிக்கு பைபாஸ் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. அப்போது இருந்த பழைய பாலங்கள் அகலப்படுத்தப்படவில்லை. வைப்பாறு நதி, சிற்றாறு நதி, சின்ன ஓடைப்பட்டி கண்மாய் பாலம், நள்ளி கண்மாய் நீர்வரத்து பாலம்போன்றவை நான்கு வழிச்சாலையில் உள்ளது. இந்தப் பாலங்கள் பழையது என்பதால் இதில் டூவீலர்கள் செல்வதற்கு போதுமான இட வசதி இல்லை.
மேலும் பாலத்தை நடந்து கடப்பதற்கு நடைமேடை வசதியும் கிடையாது. இதனால் திருச்செந்துாருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் இருக்கன்குடிக்கு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்களும் நான்கு வழிச்சாலையில் இந்த பாலங்களை கடக்கும் போது வாகனங்கள் மோதி விபத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் வெளியூரில் இருந்து புதியதாக தென் பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகளும் குறுகலான பாலங்கள் இருப்பது தெரியாமல் முன்னால் செல்லும் வாகனங்களை முந்த முற்படும் போது பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கள் நேரிடுகிறது. லாரி, கண்டெய்னர் லாரி, ஆம்னி பஸ்களும் குறுகலான பாலத்தை கடக்கும் போது முன்னால் செல்லும் வாகனங்கள் மீதும் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாகின்றன.
தற்போது நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறுகலான பாலங்களில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அகலம் குறைவாக உள்ள பாலங்களைக் கண்டறிந்து இதனை விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.