/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்ட பணிகள் தாமதம்; விவசாயம் பாதிக்கப்படுவதால் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
/
நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்ட பணிகள் தாமதம்; விவசாயம் பாதிக்கப்படுவதால் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்ட பணிகள் தாமதம்; விவசாயம் பாதிக்கப்படுவதால் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
நிலையூர் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்ட பணிகள் தாமதம்; விவசாயம் பாதிக்கப்படுவதால் விரைவுபடுத்த எதிர்பார்ப்பு
UPDATED : செப் 08, 2025 06:36 AM
ADDED : செப் 08, 2025 06:08 AM

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதாரத்திற்கு, நிலையூர் - கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. நிலம் ஆர்ஜிதம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல மாதங்களாகியும் பணிகள் துவக்காமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விளை நிலங்கள் தரிசுகளாக மாறி, சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விவசாயம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காரியாபட்டி பகுதி வானம் பார்த்த பூமி. விவசாயம் செய்ய நீர் ஆதாரம் போதுமானதாக இல்லை. 1997ல் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர நிலையூர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து நிலையூர் - -கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு சரி வர நீர் வரத்து கிடையாது. அக்கண்மாய்கள் நிறைந்தால் மட்டுமே கம்பிக்குடி, பாப்பனம், சத்திர புளியங்குளம், அல்லாளப்பேரி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசன வசதி பெற முடியும். ஏற்கனவே இருந்த வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது.
இதனை அகற்ற கோரிக்கை விடுத்தனர். பல்வேறு நிதி திட்டத்தின் கீழ் ரூ.பல லட்சம் செலவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இருந்தும் போதுமான நீர்வரத்து இல்லை. அதற்குப்பின் நிரந்தர கால்வாய் ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தினர். ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆகின. நில ஆர்ஜிதம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும், முழுமையாக தண்ணீர் கொண்டு வர முடியாமல் போனது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் தரிசுகளாக மாறி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோளங்குருணியிலிருந்து காரியாபட்டி அல்லாளப்பேரி வரை வரத்துக்கால்வாய் ஏற்படுத்தினால் 18 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். நீர் வரத்து இல்லாததால் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விரைந்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.