/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு மருந்துகளுக்கான நிதி வழங்க சுணக்கம்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு மருந்துகளுக்கான நிதி வழங்க சுணக்கம்
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு மருந்துகளுக்கான நிதி வழங்க சுணக்கம்
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு மருந்துகளுக்கான நிதி வழங்க சுணக்கம்
ADDED : செப் 23, 2024 05:24 AM
விருதுநகர், : தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்கான நிதி தேவையை விட குறைவாக வழங்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த நிதியை எடுத்து பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.
திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லுாரிகள் 2022 ஜன. 12ல் 650 முதல் 700 படுக்கைகளுடன் துவங்கப்பட்டது.
மருத்துவகல்லுாரி, மருத்துவமனைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக ஓராண்டிற்கு ரூ. 2 கோடி வரை நிதியாக வழங்கப்படுகிறது. இவை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் 1000க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இது போன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை ஆவணமாக தயார் செய்து மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தாலும், தற்போதைய தேவைக்கு ஏற்ப நிதி ஓதுக்காமல், மருந்துகளையும் வழங்காமல் மருத்துவக்கல்லுாரி துவங்கிய நாளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட படுக்கைகளை கணக்கீட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இதனால் கூடுதல் நிதிக்காக மருத்துவ கவுன்சிலிடம் கடன் பெற்று மீண்டும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் பெறப்படுகிறது.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கும் நிதியை விட ஒராண்டில் கூடுதலாக ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மருத்துவக்கல்லுாரிகளின் பல்வேறு துறைகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளித்து சேர்த்த நிதியை எடுத்து ஒவ்வொரு துறைக்கும் தேவையான மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு சில மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுகிறது.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட பழமையான மருத்துவக்கல்லுாரிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கும் தமிழ்நாடு மருத்துவகவுன்சில், புதிதாக துவங்கப்பட்ட 11 மருத்துவக்கல்லுாரிகளுக்கும் தேவைக்கு ஏற்ப நிதி வழங்கி தடையின்றி மருந்து, மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.