/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தமிழில் புதிய நிரல் மொழி மினர்வா மாணவர் சாதனை
/
தமிழில் புதிய நிரல் மொழி மினர்வா மாணவர் சாதனை
ADDED : நவ 19, 2025 07:44 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மினர்வா பப்ளிக் பள்ளி மாணவர் நிஷாந்த் ராஜ் தமிழில் புதிய நிரல்மொழி (ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்) உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
அருப்புக்கோட்டை வடுகர் கோட்டையைச் சேர்ந்த மில் தொழிலாளியின் மகன் நிஷாந்த் ராஜ். இவர் மினர்வா பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வருகிறார். மாணவர் உருவாக்கிய 'வாழைப்பழம்' என்ற நிரல்மொழி மனிதர்கள் பேசும் மொழியிலேயே கம்ப்யூட்டருடன் பேசும் வாய்ப்பை தந்துள்ளது.
இதுகுறித்து மாணவன்: பொதுவாக கம்ப்யூட்டர் குறிகள் (கோடு) ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன இதை புரிந்து கொள்வதற்கு பல மாணவர்களுக்கு சிரமமாக உள்ளது. இதை தீர்க்கும் வகையில் வாழைப்பழம் மொழி உருவாக்கியுள்ளேன். இதில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கட்டளை வழங்கலாம். இதன் சிறப்பு அம்சம் வி - நாஸ் (வாழைப்பழம் நெட்வொர்க் ஆட்டோமேஷன் சூட்) ஆகும்.
இது கம்ப்யூட்டர் இணைப்புகள், நெட்வொர்க் பிரச்னைகளை தானாக கண்டறிந்து சரி செய்ய உதவும். எளிய கட்டளைகள் மூலம் நெட்வொர்க் நிலையை அறிய முடியும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) இணைப்பு வாழைப்பழ மொழியில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனித மொழியில் கேட்கப்படும் வினாக்களை ஏ.ஐ., புரிந்து வாழைப்பழம் குறியாக மாற்றி தானாக செயல்படுத்துகிறது.
மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் உத்தரவு எழுத தெரியாவிட்டாலும் தமிழ் தெரிந்தால் போதும். இந்த திட்டத்தின் நோக்கம் மொழியால் எல்லோருக்கும் தொழில்நுட்பம் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே. ஏ. ஐ. , மற்றும் ரோபோடிக்ஸ் துறையிலும் பயன்படுத்தும் இலக்கை வைத்துள்ளேன். என்று கூறினார்.
மாணவரின் கண்டுபிடிப்பை பள்ளிச் செயலர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

