ADDED : பிப் 20, 2025 06:56 AM
விருதுநகர்: வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளி சாத்துார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில் அங்கு அவரது உடலை பிணவறை வெளியே விடிய விடிய போட்டு வைத்த ஊழியர்களால் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.
வெம்பக்கோட்டை ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த செந்தட்டிக்காளை. இவர் இந்திய கம்யூ. நிர்வாகி. பிப். 18 மாலை 6:00 மணிக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர் மட்டுமே சிகிச்சை பார்த்துள்ளார். மூச்சு திணறல் அதிகரிக்கவே அவரை சாத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், அவர் இறந்ததாக பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். மறுநாள் காலை 11:00 மணி வரை அவரது உடல் பிணவறைக்கு உள்ளே வைக்கப்படாமல் வெளியே இருந்துள்ளது. டாக்டர் இல்லாததால் சாத்துார் வரை அலைக்கழிக்கப்பட்டதாகவும், காலை 11:00 மணி வரை உடலை வெளியே வைத்ததை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
இந்திய கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் கூறியதாவது: டாக்டர் இருந்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம். இறந்த பிறகு மனிதாபிமான அடிப்படையில் கூட பிணவறைக்கு உள்ளே வைக்காமல், விடிய விடிய வெளியே வைத்துள்ளனர். கடமை தவறியவர்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பாபுஜி கூறியதாவது: செந்தட்டிக்காளை ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கல்லமநாயக்கன்பட்டி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அழைப்பு பணியில் டாக்டர் இருந்தார். தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குள் நோயாளிக்கு மூச்சு திணறல் அதிகமானதால் சாத்துார் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். பிணவறை வெளியே வைத்தது குறித்து விசாரிக்கப்படும், என்றார்.