/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தும் குடிநீர் இல்லை
/
வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தும் குடிநீர் இல்லை
ADDED : ஏப் 04, 2025 06:17 AM
சிவகாசி: சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சியில் முத்துராமலிங்கபுரம் காலனி, நேரு காலனி, ஓம் சர்மா நகர் 56 வீட்டு காலனி, பள்ளபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கும் பணி நடந்தது.
ஒரு சில பகுதிகளில் குழாய் பதிக்கப்பட்டு வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் முத்துராமலிங்கபுரம் காலனி, ஓம் சர்மா நகர், 56 வீட்டு காலனி ஆகிய பகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரையிலும் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உடனடியாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

