/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, வாறுகால், தெரு விளக்கு வசதி இல்லை
/
ரோடு, வாறுகால், தெரு விளக்கு வசதி இல்லை
ADDED : ஆக 14, 2025 11:24 PM
சாத்துார்: முறையான ரோடு, வாறுகால் தெருவிளக்கு வசதியின்றி கரிசல்பட்டியில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரிசல்பட்டி ஊராட்சியில் சிறிய குறுக்குத் தெருக்களில் பேவர் ப்ளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ள போதும் சீராக அமைக்கப்படாததால் தெருக்கள் மேடும், பள்ளமாக உள்ளது. வாறுகால்களிலும் கழிவு நீர் செல்லும் ஓடையிலும் குப்பை குவிந்து காணப்படுகின்றன. மேலும் ஓடைகள் துார்வாரப்படாததால் அவற்றில் முள்செடி புதர்போல வளர்ந்துள்ளது. இவற்றில் விஷ பூச்சிகள் தஞ்சம் அடைந்து குடியிருப்பு வாசிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலத்தெருவில் பாதையில் கழிவு நீர் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட வாறுகால்கள் துார்ந்து போன நிலையில் கழிவுநீர் வீடுகள் முன்பு தேங்கும் நிலை உள்ளது.
இதனால் கொசு அதிகளவு உற்பத்தி ஆவதால் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். இ.சேவை மைய கட்டடம் செயல்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சுகாதார வளாகம் இல்லாத நிலையில் மக்கள் திறந்தவெளியை நாடுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.