/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத பாலுாட்டும் அறை; புது பஸ் ஸ்டாண்டில் வசதி செய்யப்படுமா
/
செயல்படாத பாலுாட்டும் அறை; புது பஸ் ஸ்டாண்டில் வசதி செய்யப்படுமா
செயல்படாத பாலுாட்டும் அறை; புது பஸ் ஸ்டாண்டில் வசதி செய்யப்படுமா
செயல்படாத பாலுாட்டும் அறை; புது பஸ் ஸ்டாண்டில் வசதி செய்யப்படுமா
ADDED : ஜூன் 17, 2025 06:47 AM

விருதுநகர்; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் செயல்படாத தாய்மார் பாலுாட்டும் அறையால் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். புது பஸ் ஸ்டாண்டில் இந்த பாலுாட்டும் அறை இல்லாத நிலை உள்ளது.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் 2016 அ.தி.மு.க., ஆட்சியில் தாய்மார் பாலுாட்டும் அறை செயல்படுத்தப்பட்டது. இதில் மின்விசிறி வசதி ஏற்படுத்தி, பாதுகாக்காப்பான கட்டமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பிற நகராட்சி பஸ் ஸ்டாண்ட்களிலும் ஏற்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் தற்போது குடிமகன்களின் புகலிடமாகவும், மின் இணைப்புகளின் பியூஸ்கள் களவாடப்பட்டு, அறை பராமரிப்பின்றி குப்பை கூளமாகி கிடக்கிறது. இதனால் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இந்த அறையின் மின் இணைப்பு பியூஸ்சை யாரோ திருடியுள்ளனர். இதனால் பாலுாட்டும் அறை இருந்தும் அங்கு தாய்மார்கள் செல்வதே கிடையாது. அறையில் சுத்தம் என்பதே இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சியால் பராமரிக்கப்பட்ட இந்த அறைக்கோ இப்போது விமோசனம் இல்லை. மனிதாபிமானம் கொண்ட அதிகாரிகள் நினைத்தால் இதை பராமரித்து அறையை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாதது போல் பாலுாட்டும் அறை கேட்பாரற்று கிடக்கிறது. இத்தனைக்கும் பெண் அதிகாரிகள் தான் உயர்பொறுப்பில் உள்ளனர். சக பெண்ணிற்கு ஏற்படும் சிரமத்தை துடைக்க முன் வருவார்களா என பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் தற்போது நிறைய பஸ்கள் வந்து செல்கின்றன. நிறைய பெண்களும் குழந்தைகளுடன் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். இங்குதாய்மார் பாலுாட்டும் அறையே இல்லை. ஆனால் அதிகப்படியான தேவையாக உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் புது பஸ் ஸ்டாண்டை செயல்படுத்தியதோடு நின்று விடாமல் இது போன்ற தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.